முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பம்

2 mins read
df85dc17-d0a0-4e69-b498-039a2823933b
அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை ஆலோசகரான (இடமிருந்து) டாக்டர் கிளென் லியாவ் ஜி சியாங், திரு ரயன் லோக் வாய் கியாங், டாக்டர் மேத்தியூ நா சாங் பெங் ஆகியோர் இணைந்து, முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கான புதிய செயற்கை நுண்ணறிவுக் கணிப்புநெறியை உருவாக்கியுள்ளனர். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

அலெக்சாண்ட்ரா மருத்துவமனையால் புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஒன்றினால் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கான கால அளவு இனி பாதியாகக் குறையக்கூடும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 150க்கு மேற்பட்ட நாடுகளில் காப்புரிமைச் சான்றிதழ் பெற்ற இத்தொழில்நுட்பம், புதிய வகை செயற்கை நுண்ணறிவுக் கணிப்புநெறி (algorithm) மூலம் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் ஆற்றலைக்‌ கொண்டுள்ளது. சிங்கப்பூரில் 2023 அக்டோபரில் அது காப்புரிமையைப் பெற்றது.

அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை ஆலோசகரான டாக்டர் கிளென் லியாவ் ஜி சியாங், டாக்டர் மேத்தியூ நா சாங் பெங், திரு ரயன் லோக் வாய் கியாங் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்தக் கணிப்புநெறி, நோயாளிகளின் தனிப்பட்ட முழங்கால் அமைப்பின் அடிப்படையில் சிகிச்சை செய்யும் முறையை மேம்படுத்துகிறது.

இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் 0.1 வினாடிக்குள் ஆயிரக்கணக்கான வரிசைமுறைகளைக்‌ கணக்கிட்டு, மிகத் துல்லியமாக எலும்பைப் பொருத்துவதற்கான சிறந்த நிலையைக்‌ கண்டறியும்.

மேலும், இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இதைப் பயன்படுத்திய 92 விழுக்காட்டு அறுவை சிகிச்சைகள் 1.5 மில்லிமீட்டருக்குள் துல்லியமாக இருந்தன என்றும் இதைப் பயன்படுத்தாத சிகிச்சைகளில் 52 விழுக்காடு மட்டுமே இத்தகைய துல்லியத்துடன் இருந்தன என்றும் கண்டறியப்பட்டது.

2024 ஆகஸ்ட்டில் தொடங்கி, இதுவரை ஏறத்தாழ 200 நோயாளிகள் இந்த அறுவை சிகிச்சை முறையால் பயனடைந்துள்ளதாக திங்கட்கிழமை (பிப்ரவரி 10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் லியாவ் கூறினார். இதன் நீண்டகால விளைவுகள் குறித்து மேலும் பல ஆய்வுகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறையாக தன் முழங்கால்களில் வலி ஏற்பட்டதாகவும் இரண்டு கால்களிலும் இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறினார் இல்லத்தரசி ரீட்டா சரஸ்வதி ஆறுமுகம், 73.

“அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரத்திலேயே நான் முன்பைவிட நன்றாக நடக்க ஆரம்பித்தேன். இப்போது என் இரு முழங்கால்களும் சிறப்பாக இயங்குகின்றன.

“முழங்கால் வலியால் பாதிக்கப்படும் அனைவருக்கும் இந்த அறுவை சிகிச்சை முறையைப் பரிந்துரைக்கிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்