சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட ‘ஏஎம்டி’க்களை முறியடிக்க புதிய கருவி

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட ‘ஏஎம்டி’க்களை முறியடிக்க புதிய கருவி

2 mins read
33ed1898-8e01-4b2c-9d02-ed47985bada2
புதிய கருவியைக் கொண்டு சோதனையிடப்படும் தனிநபர் நடமாட்டச் சாதனம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

துடிப்புடன் நடமாடுவதற்கான சாதனங்கள் (ஏஎம்டி) நகராமல் இருக்கும்போது அவற்றின் வேக அளவைக் கணிக்கும் கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி பொறியாளர் ஒருவரும் மாணவர்க் குழுவினரும் சேர்ந்து இந்த வேகச் சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளனர். சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட இயந்திரங்களை முறியடிக்க அதிகாரிகள் இந்தக் கருவியைப் பயன்படுத்துகின்றனர்.

நிலப் போக்குவரத்து ஆணையம் முதன்முதலில் இந்த யோசனையை வெளிப்படுத்தியபோது இது சாத்தியம்தானா என்ற ஐயம் திரு வெங்கட ரத்னையாவிடம் இருந்தது.

“இது மிகவும் சிரமமாக இருக்கும் என்று முதலில் நினைத்தோம். முடியாது என்றுகூட நினைத்தோம்,” என்று தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் எந்திரவியல், தானியக்க நிலையத்தின் (Robotics and Automation Centre) மூத்த பொறியாளரான 53 வயது வெங்கடா சொன்னார்.

ஈராண்டுப் பணிகளுக்குப் பிறகு ஆறு தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் ஏழு கிலோகிராம் எடைகொண்ட, நகராத ஏஎம்டி சாதனத்தின் அதிகபட்ச வேகத்தைக் கணிக்கக்கூடிய கருவியை உருவாக்கினர் என்று திரு வெங்கடா தெரிவித்தார். ஏஎம்டி சாதனத்தைத் தூக்கி அதன் ஓடும் சக்கரம் சுழல்வதைக் கொண்டு அதனுடைய அதிகபட்ச வேகம் கணிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இக்கருவி உருவாக்கப்படுவதற்கு முன்பு சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட ஏஎம்டிக்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அத்தகைய சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட ஏஎம்டிக்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் செல்லக்கூடியவை.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி உருவாக்கிய இக்கருவி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அப்போது முதல் 100க்கும் அதிகமான ஏஎம்டி குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத 30 சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) தெரிவித்தது.

பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களில் சுமார் 20 விழுக்காட்டுச் சாதனங்கள், வேகச் சோதனைக் கருவி இல்லாமல் இருந்திருந்தால் அவை பிடிபடாமலும் இருந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்