ஆக நவீன வசதிகளுடன் தடுப்பூசி மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் அதிவேகத்தில் உற்பத்தி செய்யும் பெரிய அளவிலான ஆலை ஒன்று சிங்கப்பூரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.
'தெர்மோ ஃபிஷர் சைன்டிஃபிக் ஃபில்-பின்னிஷ்' ஆலை ஜூரோங் வட்டாரத்தில் உள்ள ஜூ கூன் சர்க்கிளில் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து 2020ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சிக் கழகம் அறிவித்தது.
US$130 மில்லியன் (S$175 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் திறந்து வைத்தார்.
"இந்தப் புதிய ஆலை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு உற்பத்தியாகும் தடுப்பூசிகள் வட்டார அளவில் நோய்க்கு எதிரான தாக்குப்பிடிக்கும் தன்மையை அதிகரிக்கும்.
"சனோஃபி, பயோஎன்டெக் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன. இப்போது இந்த ஆலையும் அவற்றுடன் சேர்ந்து உள்ளூரில் தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்க முடியும்.
"இது சிங்கப்பூருக்கு மட்டுமல்லாமல் ஆசிய-பசிபிக் வட்டாரத்துக்கே எதிர்கால சுகாதார நெருக்கடியைத் தாக்குப்பிடிக்கும் தன்மையை அதிகரிக்கும்," என்றும் திரு ஹெங் விவரித்தார்.
அமெரிக்க நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த முற்றிலும் கிருமியற்ற ஆலையில், தடுப்பூசி மருந்து, அதன் புட்டி, புட்டி அடைப்பான் ஆகியவை தனித்தனியாக சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் ஒன்று சேர்க்கப்படும்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு, சிங்கப்பூரில் எந்தவித தடுப்பூசி உற்பத்தி வசதியும் இருந்ததில்லை. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளில், மருந்து தயாரிக்கும் ஐந்து நிறுவனங்கள் சிங்கப்பூரில் தளம் அமைத்துள்ளன.
அதன் மூலம் பில்லியன் கணக்கான தடுப்பூசிகள் ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகின்றன. இது சிங்கப்பூரை வேகமாக வளர்ந்து வரும் பெரிய உயிர்மருத்துவ மையமாக உருவாக்கியுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று மூலம் கிடைத்த படிப்பினைகளைக்கொண்டு, சிங்கப்பூர் அறிவியல், புத்தாக்கம் ஆகியவற்றின் உதவியுடன் நோய்களுக்கெதிரான தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டுள்ளது என்றும் துணைப் பிரதமர் ஹெங் கூறினார்.
'தெர்மோ ஃபிஷர் சைன்டிஃபிக் ஃபில்-பின்னிஷ்' நிறுவனத்துக்கு உலகமெங்கும் 125,000 ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 2,000 பேர் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர்.

