செயற்கை நுண்ணறிவு மென்பொருள் குறியீடுகளால் அதிகரிக்கும் இணையப் பாதுகாப்பு, செயல்பாட்டு அபாயங்களைக் களைய உதவும் புதிய தொழில்நுட்பத்தைக் கூடிய விரைவில் உள்ளூர் நிறுவனங்கள் பெறவிருக்கின்றன.
‘சோனார்கியூப் ரெமிடியேஷன் ஏஜன்ட்’ என்று அழைக்கப்படும் அந்தப் புதிய தொழில்நுட்பக் கருவி சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டு, சோதிக்கப்பட்டது.
அது, செயற்கை நுண்ணறிவாலோ, மனிதராலோ உருவாக்கப்பட்ட மென்பொருள் குறியீடுகளில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து உரிய அனுமதியுடன் அவற்றில் திருத்தங்களைச் செய்கிறது.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மூலம் குறியீடுகளுக்கான தளங்களை ஆராய்ந்து திருத்தங்களைப் பரிந்துரைக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சோனார் என்ற மென்பொருள் நிறுவனம் அந்தத் தொழில்நுட்பத்தைக் கடந்த ஆண்டு வாங்கியது.
அதையடுத்து தகவல் தொடர்பு மின்னிலக்க மேம்பாட்டு ஆணையத்துடனும் உள்ளூர் பொறியாளர்களுடனும் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான சோதனைகளுக்குப் பிறகு நிறுவனம் அந்தக் கருவியை அறிமுகம் செய்கிறது.
அதிநவீன செயற்கை நுண்ணறிவுக் கருவிகளால் அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் குறியீடுகளை விரைவாகத் தயாரிக்க முடியும் என்றார் சோனார் நிறுவனத் தலைமை நிர்வாகி தாரிக் ஷௌகட்.
விரைவாகக் குறியீடுகள் தயாரிக்கப்படும்போது பல்வேறு பிழைகள் ஏற்பட்டு சேவைத் தடங்கலுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
மென்பொருளில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி இணையத் தாக்குதல்களை நடத்துவதற்கான அபாயமும் செயற்கை நுண்ணறிவால் பன்மடங்கு அதிகரித்துள்ளதையும் திரு ஷௌகட் சுட்டினார்.
அத்தகைய அபாயங்கள் ஏற்படுவதைத் தடுக்க பிழைகளைத் துரிதமாகக் கண்டறிந்து திருத்தம் செய்யக்கூடிய தொழில்நுட்பம் இருப்பது அவசியம் என்று அவர் விளக்கம் அளித்தார்.
மென்பொருளை உருவாக்குவோர் அதில் உள்ள பிழைகளைத் திருத்த 40 விழுக்காட்டு நேரத்தைச் செலவிடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் திரு ஷௌகட் குறிப்பிட்டார்.

