தெம்பனிஸ் வட்டாரத்தில் டச்பாயின்ட் அமைப்பின் புதிய சமூக நடுவம் அதிகாரபூர்வமாகச் சனிக்கிழமை (மார்ச் 28) திறக்கப்பட்டுள்ளது.
சமூகப் பிணைப்பை வலுப்படுத்தி தெம்பனிஸ் குடியிருப்பாளர்களின் திறனை வளர்க்கவும் வருமான வாய்ப்புகளை வழங்கவும் சமூக நடுவம் கைகொடுக்கும்.
அத்துடன், பராமரிப்பாளர்களுக்கான ஆதரவையும் மனநலத் திட்டங்களையும் சமூக நடுவம் மூலம் தெம்பனிஸ் வட்டாரவாசிகள் பெற்றுக்கொள்ளலாம். டச் சமூகச் சேவைகள் அமைப்பின் புதிய டச்பாயின்ட் சமூக நடுவம் தெம்பனிஸ் வட்டாரத்தின் புளோக் 285இல் அமைந்துள்ளது.
தெம்பனிஸ் சாங்காட் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தற்காப்புத் துணையமைச்சருமான திரு டெஸ்மன்ட் சூ புதிய சமூக நடுவத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
புதிய நடுவத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. முதல் அம்சத்தில் டச் பராமரிப்பாளர் ஆதரவுத் திட்டத்தின்கீழ் பராமரிப்பாளர்களுக்குத் தனிப்பட்ட ஆதரவும் வளங்களும் திட்டங்களும் வழங்கப்படும்.
அவற்றின் மூலம் பராமரிப்பாளர்கள், பராமரிக்கப்படுவோர் ஆகிய இருதரப்பினரின் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்று டச் அமைப்பு தெரிவித்தது.
பராமரிப்பு இல்லங்களிலும் சமூகத்தில் மூத்தோர் ஆரோக்கியமாக மூப்படைவதை வலுப்படுத்தும் அம்சங்களையும் சமூக நடுவம் கொண்டுள்ளது.
இரண்டாவதாக மனச்சோர்வைச் சமாளிக்க இளையர்க்கும் பராமரிப்பாளர்களுக்கும் உதவி வழங்கப்படும். மனநலம் குறித்த கலந்துரையாடல்களை வழக்கமாக்கி குடும்ப, சமூக ஆதரவை வலுப்படுத்த புதிய சமூக நடுவம் முற்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மூன்றாவதாக கற்றல் குறைபாடுள்ள கலைஞர்களைப் பிரதிநிதிக்கும் ஜர்னி என்ற திட்டம் திறன் வளர்ச்சியையும் அர்த்தமுள்ள வருவாய் வாய்ப்புகளையும் பெற தெம்பனிஸ் குடியிருப்பாளர்களுக்கு உதவும்.
சிறப்புத் தேவையுடையோருடன், வெவ்வேறு பின்னணியிலிருக்கும் திறமையான குடியிருப்பாளர்களும் அதன் மூலம் பயனடைவர்.

