புதிய போக்குவரத்து அணுகுமுறை; ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முன்னுரிமை

புதிய போக்குவரத்து அணுகுமுறை; ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முன்னுரிமை

2 mins read
c3ce734a-9161-40f9-8893-30befe34e1a7
புதிய அணுமுகுறையின் விளைவாக ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஒவ்வொரு முறையும் சராசரியாக 1 நிமிடம் 40 வினாடிகள் மிச்சமாவதாகத் தெரிவிக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குக் குறிப்பிட்ட சில போக்குவரத்து விளக்குகளில் புதிய போக்குவரத்து முன்னுரிமை அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் விளைவாக நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனையை விரைவாக அடைந்துவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து முன்னுரிமை அணுகுமுறை குறித்து கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பணித்திட்டக் கருத்தரங்கின்போது அறிவிக்கப்பட்டது.

இந்த அணுகுமுறையின் மூலம் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலைச் சந்திப்புகளில் நிறுத்த தேவையில்லை, சிவப்பு விளக்கு எரியும்போது அதைக் கடந்து செல்லும் நிலையும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு, நிலப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கிய புதிய போக்குவரத்து முன்னுரிமை அணுகுமுறையை இதற்காகவே ஆம்புலன்சில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளைக் கொண்டு பயன்படுத்தலாம்.

அவற்றின் உணர்கருவிகள் மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள சாலைச் சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து விளக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

கருவிகளை அழுத்தும்போது அது ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடர்ந்து செல்ல வகை செய்கின்றன.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடந்து சென்றதும் போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்பும்.

இந்தப் புதிய அணுகுமுறையின் முதல் கட்டம் ஜூலை 15ஆம் தேதியன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதில் ஜூரோங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் புக்கிட் பாத்தோக் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஓர் ஆம்புலன்சும் பயன்படுத்தப்பட்டன.

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள நான்கு சாலைச் சந்திப்புகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதை அடுத்து, உயிருக்காகப் போராடும் நோயாளிகளை ஏற்றிச் சென்றபோது புதிய அணுகுமுறையைப் பயன்படுத்திய ஆம்புலன்ஸ் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது.

அடுத்த மூன்று மாதங்களில் 76 சம்பவங்கள் பதிவாகின.

புதிய அணுகுமுறையின் விளைவாக ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஒவ்வொரு முறையும் சராசரியாக 1 நிமிடம் 40 வினாடிகள் மிச்சமாவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் அடுத்த கட்டம் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிறைவடையும்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குச் சொந்தமான மற்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில், இந்த அணுகுமுறைக்கான கருவிகள் பொருத்தப்படும்.

கூ டெக் புவாட், சாங்கி பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான முன்னுரிமை அணுகுமுறை 2026ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஒன்பது பொது மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள மொத்தம் 47 சாலைச் சந்திப்புகளில் இந்த அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படும்.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக மருத்துவமனைகளை அடைந்து உயிருக்குப் போராடும் நோயாளிகளை விரைவில் மருத்துவமனைகளில் சேர்த்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளிப்பதைப் போக்குவரத்து முன்னுரிமை அணுகுமுறை சாத்தியமாக்குகிறது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்