இணையவழி ஊழியர்கள் பாதுகாப்பாக ஓட்ட புதிய பயிற்சி

இணையவழி ஊழியர்கள் பாதுகாப்பாக ஓட்ட புதிய பயிற்சி

2 mins read
ஈராண்டுகளில் 1,400 இணையவழி ஊழியர்களைச் சென்றடைவது இலக்கு
e0970f3e-2126-4a9a-b835-41b79a29b530
சிங்கப்பூர் எக்ஸ்போவில் சனிக்கிழமை (செப்டம்பர் 12) தேசிய மோட்டார் சைக்கிளோட்டிகள் வார இறுதி நிகழ்ச்சியில் (National Bikers’ Weekend) மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதைச் சித்திரிக்கும் காட்சியைப் பார்வையிடும் உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன் (வலமிருந்து நான்காவது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

உணவு, பொருள் விநியோகச் சேவைகளை மேற்கொள்ளும் இணையவழி ஊழியர்களுக்குப் புதிய பயிலரங்கு ஒன்று வழங்கப்படுகிறது.

தங்களின் மோட்டார் சைக்கிள்களைப் பாதுகாப்பாக ஓட்டுவதற்குத் தேவையான திறன்களையும், உத்திகளையும், நம்பிக்கையையும் அவர்களிடையே வளர்ப்பது இப்பயிலரங்கின் இலக்காகும். மூன்று ஒட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் பயிலரங்கை நடத்துகின்றன.

ரைட் ஸ்மார்ட், ரைட் சேஃப்

அந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் ‘ரைட் ஸ்மார்ட், ரைட் சேஃப்’ என்னும் பயிலரங்கை தேசிய விநியோக ஆர்வலர்கள் சங்கத்துடனும் இணையவழிச் சேவை நிறுவனங்களுடனும் சேர்ந்து மாதந்தோறும் இலவசமாக வழங்கும். அந்தப் பயிற்சிகள் உட்லண்ட்சில் உள்ள சிங்கப்பூர்ப் பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும்.

ஈராண்டுகளில் 1,400 இணையவழி ஊழியர்களைச் சென்றடையும் இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளதாக உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன் தெரிவித்தார்.

மனிதவள அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி 2024ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 15,300 சிங்கப்பூர்வாசிகள் விநியோகச் சேவைகளை வழங்கும் இணையவழி ஊழியர்களாகப் பணியாற்றினர். உணவு, பொருள் விநியோகச் சேவைகள் அவற்றில் அடங்கும்.

சராசரியாக ஒருவரைவிட இணையவழி ஊழியர் குறிப்பிடத்தக்க அளவு கூடுதல் நேரம் சாலைகளில் இருக்கிறார். அதனால் அவர்கள் சாலைகளில் அதிக அபாயங்களை எதிர்நோக்குவதாக திருவாட்டி சிம் குறிப்பிட்டார். சிங்கப்பூர் எக்ஸ்போவில் ‘தேசிய மோட்டார் சைக்கிளோட்டிகள் வார இறுதி’ நிகழ்ச்சியில் (National Bikers’ Weekend) சனிக்கிழமை (செப்டம்பர் 12) அவர் பேசினார்.

“அவர்கள் நமது சமூகத்துக்கு முக்கியச் சேவையாற்றுகின்றனர். அதனால் அவர்கள் பாதுகாப்பாக ஓட்டுவதற்கு உதவும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது,” என்றார் அவர். பாதுகாப்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டுவதை ஊக்குவிக்கும் ‘சிங்கப்பூர் ரைட் சேஃப்’ இயக்கத்தை அவர் எக்ஸ்போவில் தொடங்கி வைத்தார்.

பயிலரங்கு உருவாவதற்குப் பின்னால் உள்ள கூட்டு முயற்சி, மோட்டார் சைக்கிளோட்டிகள், தொழில்துறைப் பங்காளிகள், அரசாங்க அமைப்புகள் ஆகிய தரப்புகளை ஒன்றிணைப்பதாக திருவாட்டி சிம் குறிப்பிட்டார்.

புள்ளிவிவரங்கள்

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 21 வேலையிட மரணங்கள் பதிவாயின; மாண்டோரில் நால்வர் இணையவழி ஊழியர்கள் என்று மனிதவள அமைச்சு இவ்வாண்டின் நடுப்பகுதியில் வெளியிடும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 18 வேலையிட மரணங்களில் இருவர் இணையவழி ஊழியர்களாக இருந்தனர்.

மேலும், இவ்வாண்டு முற்பாதியில் உயிரிழந்த அல்லது மோசமான காயங்கள் ஏற்பட்ட இணையவழி ஊழியர்களில் 86 விழுக்காட்டினர் வாகன விபத்துகளால் அந்நிலைக்கு ஆளானதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
பாதுகாப்புவிநியோகம்சேவைஇணையவழி ஊழியர்கள்உதவிஆதரவுபயிற்சிபயிலரங்கு