நிலையற்ற பொருளியல் சூழலில் வேலைவாய்ப்புச் சவால்களை எதிர்கொள்ளும் புதிய பட்டதாரிகளுக்கு உதவும் வகையில் அரசாங்க நிதியாதரவில் இரண்டு பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அத்திட்டங்கள் மூலம் பட்டதாரிகள் நிறுவனங்களோடு இணைக்கப்பட்டு மதிப்புமிக்க பணி அனுபவத்தைப் பெறுவார்கள் என்றும் அதன்வழி வேலை வாய்ப்புகளை எளிதில் பெறும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார், அரசாங்கத் துறைகளில் பயிற்சி பெற மொத்தம் 800 இடங்கள் வழங்கப்படுகின்றன.
நிதிச் சேவைகள், தகவல்தொடர்பு தொழில்நுட்பம், உற்பத்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் ‘பட்டதாரிகளுக்கான தொழில்துறை வேலைப் பயிற்சித் திட்டம்’ (GRIT) வாயிலாக பட்டதாரிகள் தனியார் நிறுவனங்களுடன் இணைக்கப்படுவார்கள்.
‘பட்டதாரிகளுக்கான தொழில்துறை வேலைப் பயிற்சித் திட்டம்@அரசாங்கம திட்டம்’ (GRIT@Gov) அரசாங்க அமைப்புகளில் பயிற்சிபெறும் வாய்ப்பை வழங்கும்.
இரண்டு திட்டங்களுக்கும் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து விண்ணப்பம் செய்யலாம்.
மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலான இந்தப் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு மாதந்தோறும் $1,800 முதல் $2,400 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதில் 70 விழுக்காட்டுத் தொகையை அரசாங்கமும் மீதியைப் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் ஏற்கும்.
இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லாரன்ஸ் வோங் முதன்முறையாக அறிவித்த இத்திட்டங்களைப் பற்றி மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேலும் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, பொதுச் சேவைப் பிரிவு ஆகியவற்றின் கூட்டுமுயற்சியான இது, சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவின் முத்தரப்புப் பங்காளிகளுடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்பட்டன.
பட்டதாரிகளின் கல்விச் சான்றுகளுக்கும் முதலாளிகளின் நடைமுறை அனுபவத் தேவைகளுக்கும் இடையே நிலவும் இடைவெளியை நிரப்புவதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கம் என டாக்டர் டான் குறிப்பிட்டார்.
“வேலை வாய்ப்புகள் இருந்தாலும், பல நிறுவனங்கள் பல்லாண்டு அனுபவம் கொண்டவர்களையே விரும்புகின்றன. ஆனால், முதலில் வாய்ப்பு எதுவும் வழங்கப்படாவிட்டால் பட்டதாரிகள் அனுபவம் பெற முடியாது என்பதே பிரச்சினை,” என்றார் அவர்.
அனுபவம் இல்லாததால் வேலை பெறுவதில் பட்டதாரிகள் சந்திக்கும் சிக்ககளுக்கு இது ஒரு தீர்வாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இத்திட்டங்கள் முழுநேர அல்லது பணியிடைக்கால பணியாளர்களின் வேலை வாய்ப்புகளைப் பாதிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன என்றும் குறைந்த சம்பளத்தில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் வாய்ப்பாக நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
கிராப், மைக்ரான், ஓசிபிசி, எஸ்டி இன்ஜினியரிங், சீ லிமிடெட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கவுள்ளன. ‘கரியர்ஸ்@கவ்’ இணையப்பக்கம் வழியாக ஏற்கனவே 2,400 பணியிடங்களை வழங்கிவரும் அரசாங்க அமைப்புகளும் இதில் இணைந்துள்ளன.
சிங்கப்பூரிலுள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், பல்துறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அல்லது மற்ற தனியார், வெளியூர்க் கல்வி நிலையங்களில் பட்டம் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.
2024, 2025ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்ற சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் விண்ணப்பிக்கலாம். தேசிய சேவையைக் கடந்த ஆண்டு அல்லது இவ்வாண்டு முடித்தவர்கள், 2024க்கு முன்பு பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும் தகுதிபெறுவர். 2025ஆம் ஆண்டுப் படிப்பை முடித்து, 2026ல் சான்றிதழ் பெறவுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் இப்போதே https://go.gov.sg/grit-trainee-interestform என்ற இணையத்தளம் வழியாக தங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்யலாம். மேல்விவரங்கள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
பொருளியல் நிலைமை மோசமடைந்தால் திட்டங்களை விரிவுபடுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டான் தெரிவித்தார்.
“வெவ்வேறு நெருக்கடிநிலைத் திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். மந்தநிலை தீவிரமானால், அதிக ஆதரவை விரைவாக வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார் அவர்.