செந்தோசா, புலாவ் பிரானி தீவுகளுக்கு இடையே மக்கள் எளிதாகவும் வசதியாகவும் சென்றுவர புதிய நீர் டாக்சிச் சேவையைத் தொடங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் கூறியுள்ளார்.
தற்போது செந்தோசா தீவு, கம்பி வண்டி, மோனோரயில், செந்தோசா கேட்வே பாலம் ஆகியவற்றின் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும்போது புதிய போக்குவரத்து வசதிகளும் கூடுதலான சேவைகளும் நமக்குத் தேவைப்படும் என்று அவர் கூறினார்.
இதற்காக, செந்தோசா, பிரானியை இணைக்கும் வகையில் புதிய குறுந்தொலைவுப் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு (people mover system) உருவாக்கப்படும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
தற்போது விவோசிட்டி முதல் செந்தோசா வரை இயங்கும் 2.1 கிலோமீட்டர் தூர மோனோரயிலுக்குப் பதிலாக, அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் விதத்தில் இந்த நவீனக் கட்டமைப்பு செயல்படும்.
“அறிமுகப்படுத்தப்படவுள்ள இப்புதிய போக்குவரத்துச் சேவைகள், மக்கள் தீவுகளுக்கு மிக எளிதாகச் சென்றுவரவும், தீவுகளுக்குள் தடையின்றி உலா வரவும் பெரிதும் உதவும்,” என்று திரு வோங் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் புதிய கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் வகையில், 2026 ஜூலையில் வெளியிடப்பட்ட ‘கிரேட்டர் செந்தோசா’ பெருந்திட்டத்தின்கீழ் இரு தீவுகளையும் தலைநிலத்தையும் ஒருங்கிணைக்க ‘ஐலண்ட் ஹார்ட் போக்குவரத்து நடுவம்’ (Island Heart Transport Hub) ஒன்றும் புதிதாக அமைக்கப்படவுள்ளது.
அத்துடன், கெப்பல் துறைமுகப் பகுதி வழியாகத் தலைநிலத்தையும் புலாவ் பிரானியையும் இணைக்க ‘கெப்பல் லிங்க்’ (Keppel Link) எனப்படும் புதிய பாலத்தை அமைப்பதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.


