டி-செல் லுக்கீமியா (T-cell leukemia) என்றழைக்கப்படும் அரிய வகை ரத்தப் புற்றுநோய்க்குப் புதிய சிகிச்சை முறை உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வழங்கப்படும் சிகிச்சை முறைகள் அதிகம் பலனளிக்காத அந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்குப் புதிய சிகிச்சை முறை நம்பிக்கை அளிகப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும் மருத்துவர்களும் சிடி7 சிஏஆர் டி-செல் (CD7 CAR T-cell) எனும் புதிய சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளனர். அந்த சிகிச்சை முறை, சோதனைக் கட்டத்தில் இருந்தபோது அதன் மூலம் சில நோயாளிகள் பலனடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
டி-செல் ரத்தப் புற்றுநோய்க்கு ஆளானோர், புதிய சிகிச்சையை மேற்கொண்ட பிறகு புற்றுநோய் செயலிழந்துபோனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
டி-செல் எனும் உயிரணுவின் வடிவமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் சிடி7 சிஏஆர் டி-செல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. டி-செல் உயிரணு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் போன்றவற்றை எதிர்க்கும் ஆற்றலை உடலுக்குத் தரும் ஒரு வகை வெள்ளை ரத்த உயிரணு. புற்றுநோய் விளைவிக்கும் உயிரணுக்களை அழிக்க, டி-செல் உயிரணுக்கள் அறிவியல் ஆய்வுக்கூடத்தில் மாற்றியமைக்கப்படும். பின்னர் அவை நோயாளியின் உடலுக்குள் திருப்பி அனுப்பப்படும்.
சிஏஆர், புற்றுநோய் உயிரணுக்களில் உள்ள குறிப்பிட்ட புரத சத்துடன் (protein) ஒட்டிக்கொண்டிருக்கும் செயற்கை புரத சத்தாகும். அதன் மூலம் புற்றுநோய் உயிரணுக்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதில் சிஏஆர் டி-செல் உயிரணுக்கள் பெரிதும் பலனளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கூடங்களில் சிஏஆர் டி-செல் உயிரணுக்கள் நான்கு மணிநேரத்தில் 60 விழுக்காட்டு ரத்தப் புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் ஆற்றல் பெற்றவை. 24 மணிநேரத்தில் ஒடடுமொத்த ரத்துப் புற்றுநோய் உயிரணுக்களையும் அழிக்க முடியும்.
சிடி7 சிஏஆர் டி-செல் சிகிச்சை, 2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 17 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 12 பேர், இத்தாலியத் தலைநகர் ரோமில் உள்ள ஒஸ்பிடரேலே பிடியாட்ரிக்கோ பம்பீனோ கெசு (Ospedale Pediatrico Bambino Gesu) மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட ஐவர் ஆகியோர் அந்த 17 பேரில் அடங்குவர்.