சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய தானியக்க உணவு விநியோக இயந்திரங்கள் நம்பகமான முறையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை விநியோகிக்கின்றன.
உள்ளூர் காப்பி, ‘ஷியோ பன்’ எனப்படும் ஜப்பானிய சுருள் ரொட்டி, மட்பாண்டத்தில் தயாரிக்கப்படும் பாணியிலான கோழிச்சோறு போன்றவற்றை இவ்வாறு பெற முடியும்.
பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்பேட்டைகள் போன்ற இடங்களில் பல காலமாகவே உணவு, பானங்களை விநியோகிக்கும் தானியக்க இயந்திரங்கள் உள்ளன.
இருப்பினும், இந்தப் புதிய தலைமுறை இயந்திரங்கள், காப்பிக் கடை அல்லது உணவகத்தில் வாங்கும் உணவைப் போலவே, புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவின் சுவைக்கு ஈடான தரத்தில் உணவு வகைகளை விநியோகம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில் மனிதவளத் தேவை, வாடகை குறித்த கவலை போன்றவற்றுக்கு தீர்வு வழங்குவதோடு பயணம் செய்வோருக்கும் பரபரப்பான வாழ்க்கைமுறையை மேற்கொள்வோருக்கும் சேவை வழங்குவதாகவும் இது அமைகிறது.
‘இன்ஸ்டசெஃப்’ நிறுவனம் சிங்கப்பூர் முழுவதும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இயந்திரங்களை நிறுவியுள்ளது. இவற்றில் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவு வகைகள், பானங்கள், இனிப்புகள் போன்றவற்றைப் பெறலாம்.
‘வாட் த கப்’ நிறுவனம் இம்முறையில் 300 வகையான பானங்களை விநியோகிக்கிறது.
‘கோப்பி நியர் மீ’ நிறுவனத் தானியக்க இயந்திரங்கள் நன்யாங்-பாணி காப்பி பானத்தை விநியோகிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
உட்லே வில்லேஜ் உணவங்காடி நிலையத்தில் உள்ள ‘பட்டர் டவுன் பேக்கரி’யின் தானியக்க இயந்திரத்தில் ‘ஷியோ பன்’ எனப்படும் ஜப்பானிய சுருள் ரொட்டியை வாங்கிச் சுவைக்கலாம்.