விலங்குநல மருத்துவத் துறையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தொழில்முறை ஒழுங்குமுறை அமைப்பாகச் செயல்ப, புதிய விலங்குநல மருத்துவ மன்றம் ஒன்றைச் சிங்கப்பூர் அமைக்கவுள்ளது.
‘விலங்குநல மருத்துவ நடைமுறை’ மசோதாவை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் திட்டம் குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் துணை அமைச்சர் ஆல்வின் டான் புதன்கிழமை (மார்ச் 4) பேசினார்.
விலங்குநல மருத்துவர்களின் தரத்தை மேம்படுத்துவதை அம்மன்றம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 2021ஆம் ஆண்டுமுதல் விலங்குநல மருத்துவத் துறையுடனும் இதர தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் ஒத்துழைப்பின் விளைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலங்குநல மருத்துவத் துறையை முறைப்படுத்துவது மட்டுமன்றி, விலங்குகளைப் பாதுகாக்கவும் அவற்றின் நலனை உறுதிசெய்யவும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
விலங்குவதைக்குக் கடுமையான தண்டனை
விலங்குநலனை மேம்படுத்தவும் அவை வதைக்கப்படுவதைத் தடுக்கவும் தற்போதைய சட்டங்களை அரசாங்கம் விரிவாக மறுஆய்வு செய்து வருகிறது.
விலங்குவதையைத் திறம்படக் கையாளும் வகையில், அக்குற்றங்களுக்கான சிறைத்தண்டனை, அபராதம், தகுதியிழப்பு உத்தரவுகள் ஆகியவற்றில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
விலங்குகள், பறவைகள் சட்டம் மறுஆய்வு
விலங்குகளுக்கான நோய்த் தடுப்பிலும் கட்டுப்பாட்டிலும் நாட்டின் திறன்களை வலுப்படுத்துவதற்காக, ‘விலங்குகள், பறவைகள் சட்டம்’ தொடர்பில் 2022ஆம் ஆண்டுமுதல் அதிகாரிகள் விரிவாக ஆலோசித்து வருகின்றனர்.
விலங்குநலன் குறித்து ‘ஏக்கர்ஸ்’, ‘எஸ்பிசிஏ’ ஆகிய அமைப்புகள் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பில் அண்மையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களைத் துணை அமைச்சர் டான் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டுப் பிற்பகுதியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கு முன்னதாக, முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் அரசாங்கம் கவனமாக ஆராயும்.
செல்லப்பிராணி பராமரிப்பாளர்க்கும் பயிற்சியாளர்க்குமான நடைமுறைகள்
தற்போதுவரை ஒழுங்குமுறைப்படுத்தப்படாத செல்லப்பிராணிப் பராமரிப்புச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்திவருகிறது.
இவ்வாண்டு, ‘விலங்குநல விதித் தொகுப்பில்’ (Code of Animal Welfare) செல்லப்பிராணிப் பராமரிப்பாளர்களை மையப்படுத்திய மறுஆய்வு மேற்கொள்ளப்படுவதுடன், நாய்ப் பயிற்சியாளர்களுக்கான புதிய அத்தியாயமும் சேர்க்கப்படவுள்ளது.
தற்போது அந்தத் துறைகளுக்கு உரிமம் வழங்கும் திட்டம் ஏதும் இல்லாததால், அவற்றின் தரநிலைகளில் வேறுபாடுகள் காணப்படலாம்.
அப்பிரிவுகளில் தொழில்முறையை மேம்படுத்துவதற்காக, தொடர்புடைய தரப்பினரிடமும் பொதுமக்களிடமும் ஆலோசனை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

