கைப்பேசிச் செயலிகளை உருவாக்குவோர் பாதுகாப்பு பலவீனங்களைக் கண்டறிந்து சரிசெய்ய இணையத்தில் உதவி கிடைக்கவிருக்கிறது.
செயலிகளை அறிமுகம் செய்வதற்கு முன்னர் அவற்றைச் சோதித்துப் பார்க்கப் புதிய இணையவாசல் புதன்கிழமை (அக்டோபர் 22) தொடங்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மோசடிகள் அல்லது தீமை விளைவிக்கும் மென்பொருள்களின் மூலம் இணையக் குற்றவாளிகள் தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்க அது உதவியாக இருக்கும்.
‘தி சேஃப் ஏப் போர்ட்டல்’ என்ற அந்தப் புதிய இணையவாசல் ஆறு மாதத்திற்குச் சோதித்துப் பார்க்கப்படும். சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இணையவாசலில் பதிவேற்றப்படும் செயலிகள், பாதுகாப்பு ஆபத்துகளுக்காகச் சோதித்துப் பார்க்கப்படும். தீங்கிழைக்கும் நடத்தைக்கான அறிகுறி, வழக்கத்துக்கு மாறான அனுமதி கோரல், கணினி நிரல் பாதுகாப்பு அம்சம் முதலியவை மதிப்பீடு செய்யப்படும்.
நிலைமையைச் சரிசெய்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, செயலியை உருவாக்குவோருக்குக் கொடுக்கப்படும் என்று அமைப்பு சொன்னது. சோதிக்கப்பட்ட ஒவ்வொரு செயலிக்கும் குறிப்பிட்ட வண்ணத்துடன் கூடிய பாதுகாப்புத் தரநிலை வழங்கப்படும்.
பச்சை என்றால் ஆபத்துக் குறைவு, தீங்கிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொருள்.
மஞ்சள் என்றால் சந்தேகத்திற்குரிய சில நடத்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, சில பலவீனங்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.
சிவப்பு என்றால் தீங்கிழைக்கும் அம்சங்களும் முக்கியப் பாதுகாப்பு ஆபத்துகளும் இருப்பதற்குரிய வலுவான அறிகுறிகள் தென்படுகின்றன, சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை கூறப்படுகிறது என்று பொருள்.
தொடர்புடைய செய்திகள்
மென்பொருள்களை உருவாக்கும் நிறுவனங்கள் சிலவற்றுக்குப் போதிய வளங்கள் இல்லாமையால் புதிய இணையவாசல் உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தின் தொடர்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு இடையே அவர்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
வங்கி, தொடர்பு போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்குக் கைப்பேசிச் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரம் பணம், தரவுகள், அடையாளங்கள் முதலியவற்றைக் களவாடுவதற்கான நுழைவாயிலாகவும் அமைந்துவிடுகின்றன என்றார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ்.
சிங்கப்பூரர்கள் பயன்படுத்தும் செயலிகள் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிசெய்ய இணையவாசல் போன்ற முயற்சிகள் உதவும் என்றார் அவர்.

