சட்டவிரோத வாடகை கார் சேவைகள் வழங்குவோர் பற்றி புகார் அளிக்க புதிய வசதியை நிலப் போக்குவரத்து ஆணையம் ஏற்படுத்தி உள்ளது.
ஒன்மோட்டாரிங் (OneMotoring) இணையத்தளத்தில், புகார் படிவம் அடங்கிய பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டு உள்ளது.
சட்டவிரோத போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் உரிமம் அற்ற வாகன ஓட்டுநர்களுக்கு வலைவீசிவரும் ஆணையத்தின் முயற்சிக்குக் கைகொடுக்க இந்தப் புகார் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூருக்குள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கும் மலேசியாவுக்குச் சென்று வரவும் சட்டவிரோத போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்படுவது பற்றி அண்மையில் ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது.
வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட கார்கள் சிங்கப்பூரில் சட்டவிரோத போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடுவது பற்றி தகவல் தெரிந்தோர் அதுகுறித்து தகவல் அளிக்க புதிய இணையப் புகார் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷூவெலிங் புதன்கிழமை (ஜூலை 23) தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
“நமது பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் நலனைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்,” என்று அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்கப்பட்ட புகார் பிரிவுக்கு புதன்கிழமை வரை எந்தப் புகாரும் வரவில்லை.
அதில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது ஆணையம் புலன் விசாரணை நடத்தும்.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோத வாடகை கார் சேவை வழங்கியதாக ஆணையத்திடம் துப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு அமலாக்கச் சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் மற்றும் தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கத்திடம் இருந்து அந்தத் துப்புத் தகவல்கள் பெறப்பட்டன.
ஜூலை 11ஆம் தேதியும் 18ஆம் தேதியும் சாங்கி விமான நிலையத்திலும் கரையோரப் பூங்தோட்டத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த இரு பகுதிகளிலும் சட்டவிரோத வாடகை கார் சேவை வழங்கிய 32 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.