கரையோரப் பூந்தோட்டங்களில் புதிய சதுப்புநிலப் பகுதி

கரையோரப் பூந்தோட்டங்களில் புதிய சதுப்புநிலப் பகுதி

3 mins read
a979049e-63f3-452b-8417-ecb64977e811
கரையோரப் பூந்தோட்டங்களில் தற்போது அமைந்திருக்கும் கிங்ஃபிஷர் சதுப்புநிலம் விரிவுபடுத்தப்பட்டு கரையோரச் சதுப்புநிலம் (வெட்லண்ட்ஸ் பை த பே) என்ற புதிய சதுப்புநிலப் பகுதியாக அறிமுகப்படுத்தப்படும். - படம்: சாவ்பாவ்

கரையோரச் சதுப்புநிலம் (Wetlands by the Bay) எனப்படும் புதிய சதுப்புநிலப் பகுதியைக் கரையோரப் பூந்தோட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளது.

இது, தற்போதைய கிங்ஃபிஷர் சதுப்புநிலத்தின் பரப்பளவைவிட மும்மடங்கு பெரியதாக அமையும். மேலும், இதில் மரங்களின் உச்சியினூடாக வெகு உயரத்தில் அமைக்கப்பட்ட கவிகை உலாமேடை (canopy boardwalk), பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் சமூக நடவடிக்கைகளுக்கும் சிறப்பாக ஒதுக்கப்பட்ட புதிய பகுதியும் அமைந்திருக்கும்.

புதன்கிழமை (மார்ச் 4) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் ஆல்வின் டான் இதை அறிவித்தார்.

விரிவாக்கம் செய்யப்பட்ட இந்தச் சதுப்புநிலப் பகுதியில் 600க்கும் மேற்பட்ட கடலோரத் தாவரங்கள் இடம்பெறும். பார்வையாளர்கள் இங்கு, படகு சவாரி (kayaking) செய்யலாம்.

மேலும், எளிதில் சென்றடையும் வசதியை மேம்படுத்தும் வகையில், சதுப்புநிலத்தின்மேல் அமைக்கப்படும் புதிய நடைபாதை, கரையோரப் பூந்தோட்டங்கள் பெருவிரைவு ரயில் நிலையத்தை பே சவுத் (Bay South) தோட்டத்தில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்களுடன் இணைக்கும்.

இந்தத் திட்டத்தில் ‘க்ளேட் லான்’ (Glade Lawn) எனப்படும் சமூகப் பசுமை வெளியும் உள்ளடங்கும். இது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், பார்வையாளர்கள் இளைப்பாறுவதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, பே சவுத், பே ஈஸ்ட் தோட்டங்களை நேரடியாக இணைக்கும் புதிய நடையர் மேம்பாலத்திற்கான பணிகளும் தொடங்கப்படவுள்ளன; இது 2028க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல்சார் பாதுகாப்பிலும் ஆராய்ச்சியிலும் மேம்பாடுகள்

சிங்கப்பூரின் நீர்நிலைகளைப் பாதுகாப்பது அமைச்சின் மற்றொரு முக்கிய முன்னுரிமை என்று துணை அமைச்சர் டான் கூறினார். பொழுதுபோக்கு, பாதுகாப்பு, ஆராய்ச்சி, கல்விக்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் வகையில், இந்த ஆண்டு லாசரஸ் சவுத் (Lazarus South), கூசு ரீஃப் (Kusu Reef) பகுதிகளில் இரண்டாவது கடல்சார் பூங்கா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

சிங்கப்பூரின் தெற்குத் தீவுகளில் அமையவிருக்கும் இரண்டாவது கடல்சார் பூங்கா, கூசு ரீஃப் (Kusu Reef), லாசரஸ் சவுத் (Lazarus South) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
சிங்கப்பூரின் தெற்குத் தீவுகளில் அமையவிருக்கும் இரண்டாவது கடல்சார் பூங்கா, கூசு ரீஃப் (Kusu Reef), லாசரஸ் சவுத் (Lazarus South) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. - படம்: தேசியப் பூங்காக் கழகம்

இந்தக் கடல்சார் சூழல்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள, $60 மில்லியன் முதலீட்டில் புதிய கடல் அறிவியல் ஆராய்ச்சிச் சிறப்பு மையம் நிறுவப்படவுள்ளது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் நிர்வகிப்பிலும், ‘ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2030’ (RIE2030) நிதியுதவியுடனும் செயல்படவுள்ள இந்த மையம், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், துறைசார் நிபுணத்துவங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் திறன்களை ஒருங்கிணைக்கும்.

இந்த மையத்திற்காக தேசியப் பூங்காக் கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும். மேலும், உள்ளூர்த் திறனாளர்களை உருவாக்குவதற்கும் கடல் அறிவியல் சூழலியலின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், செயின்ட் ஜான்ஸ் தீவு தேசிய கடல்சார் ஆய்வகம் (St John’s Island National Marine Laboratory) போன்ற நிறுவனங்களுடனும் அது இணைந்து செயலாற்றவுள்ளது.

தென்மேற்குப் பூங்காக்களின் புதுபிப்பு

சிங்கப்பூரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மூன்று முக்கியப் பூங்காக்கள் உட்பட பதின்மூன்று பூங்காக்களைப் புதுப்பித்து, அவற்றை இணைக்கும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

லாப்ரடார் இயற்கைப் பூங்கா.
லாப்ரடார் இயற்கைப் பூங்கா. - படம்: சாவ்பாவ்

இந்த மேம்பாட்டுப் பணிகள் குறித்துப் பூங்காப் பயனர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்காக தேசியப் பூங்காக் கழகம் பொதுமக்களுடன் கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தியது.

இந்த அமர்வுகளின் மூலம் திரட்டப்பட்ட கருத்துகளில், பூங்கா வசதிகளை மேம்படுத்துதல், எளிதில் சென்றடையும் வகையிலான அணுகுமுறையை உருவாக்குதல், பசுமையான அமைதியான சூழலைப் பாதுகாத்தல், அனைவரையும் உள்ளடக்கிய வடிவமைப்புகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வெஸ்ட் கோஸ்ட் பூங்கா, லாப்ரடார் இயற்கைப் பூங்கா இரண்டும் மேம்படுத்தப்படும். கூடுதலாக, ஹோர்ட்பார்க் (HortPark) பூங்கா, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத் தோட்டக்கலை மையமாக விரிவுபடுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்