உங்கள் தமிழ் மொழித்திறனைச் சோதிக்கும் ஒரு விளையாட்டை தமிழ் முரசு அதன் செயலியில் இம்மாதம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மாணவர்களும் இளையர்களும் சுவாரசியமான முறையில் மொழியைக் கற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்த விளையாட்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு புதிரிலும் வழங்கப்படும் 10 கேள்விகளுக்கும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து முடித்தவுடன் அந்தப் புதிர் நிறைவுக்கு வரும்.
ஒவ்வொரு கேள்வியிலும் இடம்பெறும் ஆங்கிலச் சொல்லுக்கு மூன்று தமிழ்ச் சொல் தெரிவுகள் வழங்கப்படும். அதில் சரியான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்கும்போது பச்சை நிறமாக அந்தச் சொல் மாறி அடுத்த கேள்விக்குச் செல்லலாம்.
தவறான சொல்லைத் தேர்ந்தெடுத்தால் மனம் தளரவேண்டாம். அந்தச் சொல் சிவப்பு நிறமாக மாறி, அந்த சொல்லுக்கான சரியான ஆங்கிலச் சொல் வழங்கப்படும். மொழித்திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாகவும் இது அமையும்.
கிட்டத்தட்ட 1,000 சொற்களுடன் தொடங்கியுள்ள இந்த விளையாட்டில், நாளடைவில் மேலும் பல சொற்கள் சேர்க்கப்படும். வரும் வாரங்களில் 2,000 சொற்களை எட்டும் இலக்கை தமிழ் முரசு கொண்டுள்ளது.
தற்போது தமிழ் முரசு செயலி[Ϟ]யில் மட்டுமே வழங்கப்படும் இந்த விளையாட்டு, டிசம்பர் மாதத்தில் தமிழ் முரசின் இணையப்பக்கத்திலும் இருக்கும்.
தமிழ் முரசு செயலியைப் பதிவிறக்கம் செய்த உடனே இந்த விளையாட்டை விளையாடி மகிழலாம். செயலியை ஆப்பிள் செயலியகம், கூகல் செயலியகம் ஆகியவற்றில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ‘சொல்லாட்டம்’ விளையாட்டு குறித்து ஏதேனும் கருத்துகள் இருந்தால் அவற்றை tamilmurasu@sph.com.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் தமிழ் முரசு செய்திக் குழுவுக்குத் தெரிவிக்கலாம்.

