தொழில்நுட்பக் கல்விக் கழகம், அதன் முதல் வேலை-கல்விப் பட்டயக் கல்வித் திட்டத்தைத் தாதிமைத் துறையில் தொடங்கியுள்ளது.
சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் பணிபுரியும் தாதியருக்கு வகுப்பறைக் கற்றலுடன் வேலையில் நேரடிப் பயிற்சியை வழங்குவது நோக்கம்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், செப்டம்பர் 30ஆம் தேதி இந்தப் பட்டயக் கல்வித் திட்டத்தைச் சுகாதார அமைச்சில் தொடங்கிவைத்தார்.
தாதிமைத் துறைத் தலைவர்கள், சுகாதாரப் பராமரிப்பு சேவை ஊழியர்கள் சங்கம் ஆகிய தரப்புகளுடன் இணைந்து இந்தப் பட்டயக் கல்வி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அடிப்படைத் தாதிமை சேவைகளை வழங்கும் ‘என்ரோல்டு நர்ஸ்’ எனும் தாதியர், ‘ரெஜிஸ்டர்ட் நர்ஸ்’ எனும் உயர்நிலைக்கு மேம்படுத்திக்கொள்ள இத்திட்டம் உதவும்.
வேலை, ஊதியத்திற்கு இடையூறின்றி அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தொழிலில் மேம்பாடு காணவும் சுகாதாரப் பராமரிப்புத் துறை சார்ந்த புதிய தேவைகளை ஈடுகட்டவும் வாய்ப்பு பெறுவர் என்று அமைச்சர் ஓங் கூறினார்.
இந்தப் பட்டயக் கல்வியில் 30 விழுக்காடு கல்விக்கழக வளாகத்திற்குச் சென்று பயிலவேண்டும். 70 விழுக்காடு வேலையில் நேரடிப் பயிற்சி வழங்கப்படும். பட்டயம் பெற்றவர்கள் ‘ரெஜிஸ்டர்ட் நர்ஸ்’ எனும் உயர்நிலைத் தாதியராகப் பணியாற்றலாம்.
‘என்ரோல்டு நர்ஸ்’ எனும் தாதியர் இத்தகைய உயர்நிலைத் தாதியரின் மேற்பார்வையில் பணியாற்றுவர்.
தொடர்புடைய செய்திகள்
இத்திட்டம் கற்றலை எளிதாக்குவதோடு நோயாளிகளுக்கு மேம்பட்ட முறையில் பராமரிப்பு வழங்கவும் உதவும் என்கிறார் கூ டெக் புவாட் மருத்துவமனையில் பணிபுரியும் 23 வயதுத் தாதி நூர் ஷாஹிரா மாஹாடி.
முன்னர் இவர் மேற்படிப்பு வேண்டாமென முடிவெடுத்திருந்தார். நிதி, குடும்பக் கடப்பாடுகள் அதற்குக் காரணம்.
டான் டோக் செங் மருத்துவமனையில் பணிபுரியும் பிரிட்ஜெட் வர்ஜிலியா வெல்ஃபோர்ட், 37, எந்தத் துறையிலும் வாழ்நாள் கற்றல் அவசியம் என்றும் மாறிவரும் பொறுப்புகளுக்குப் பொருத்தமாக விளங்க அது முக்கியம் என்றும் கருதுகிறார்.
முன்னர் விளம்பரத் துறையில் வேலைசெய்த இவர், கொவிட்-19 கிருமிப்பரவலின்போது அந்த வேலையை விட்டு விலகி, சுகாதரப் பராமரிப்பு உதவியாளர் படிப்பை மேற்கொண்டார்.