சிங்கப்பூரில் உள்ள மனநல ஆலோசகர்களின் (clinical psychologists) எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் என்எச்ஜிஹெல்த் குழுமமும் இணைந்து புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.
இத்திட்டம், மனநல ஆலோசகர்களும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் வேலை பார்த்துக்கொண்டே முதுநிலைப் பட்டம் பெற வகைசெய்கிறது.
இந்த மூவாண்டுத் திட்டம் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும். திட்டத்தில் முதலாவதாக சேரும் மாணவர்கள் 2029ஆம் ஆண்டு பட்டக்கல்வியை முடிப்பர்.
துணை மனநல ஆலோசகர்கள், அவ்வளவு மோசமாக இல்லாத மனநலப் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு மனநல ஆதரவு வழங்குவர். அதேவேளை, மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களால் சொந்தமாகக் கவனிக்க முடியாது.
எனினும், இந்தப் பாடத் திட்டத்தை மேற்கொள்வதன் மூலம் அவர்கள் மேற்பார்வையுடன் வேலைப்பயிற்சிவழி இந்தத் திறனைக் கற்றுக்கொள்ள முடியும்.
இன்னும் சொல்லப்போனால் மன அழுத்தம் போன்ற சில மனநலப் பிரச்சினைகளுக்கு எத்தகைய மருந்தைப் பரிந்துரைக்கவேண்டும் என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்வர். அதற்கு என்ஹெச்ஜி ஹெல்த் சுகாதாரக் குழுமத்தின்கீழ் இயங்கும் மனநலக் கழகத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர்கள், மருந்துத் துறை நிபுணர்கள் (pharmacist) ஆகியோரிடமிருந்து அவர்கள் பயிற்சி பெறுவர்.
சிங்கப்பூரில் தற்போது முறையாகப் பயிற்சி பெற்ற மருத்துவர்களும் மனநல மருத்துவர்களும் மட்டும்தான் மனநலப் பிரச்சினைகளுக்கு மருந்து பரிந்துரைக்க அனுமதி உண்டு. அந்த விதிமுறை வருங்காலத்தில் மாறக்கூடும் என்று எதிர்பார்ப்பதால் இந்த முதுநிலைப் பட்டக் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர்கள் அதற்கான பாடத்தை சேர்த்துள்ளனர்.
மருத்துவர்களின் மேற்பார்வையில் இயங்கும் கட்டமைப்பின்கீழ் வல்லுநர் நிலைத் தாதியரும் (advanced practice nurses) மூத்த மருந்துத் துறை நிபுணர்களும் நோயாளிகளுக்கு மருந்தைப் பரிந்துரைப்பதற்கான திறன்களை வளர்க்க சுகாதார அமைச்சு 2018ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் புதிய பாடத் திட்டத்தின் பெயர் பயன்முறை நிபுணத்துவ மனநலனுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட படைப்பாற்றல் கல்வித் திட்டம் (Applied Specialist Psychology Integrated Residency Education). இது, எஸ்பையர் என்றும் அழைக்கப்படுகிறது.

