நுழைவுச்சீட்டுகளை வாங்கி லாபத்திற்கு விற்றல், வாகனப் பகிர்வுச் சேவை தொடர்பான சச்சரவுகளில் சிக்குதல் போன்றவை பயனீட்டாளர்களுக்கு அக்கறைக்குரிய விவகாரங்களாக உருவெடுக்கும் நிலையில், இதுபோன்ற சூழல்களைக் கையாளப் புதிய பணிக்குழு ஒன்றை சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் அமைத்துள்ளது.
“சிங்கப்பூர் வட்டார அளவில் பொழுதுபோக்கு மையமாகத் திகழ்வதில் முனைப்பு காட்டி வருகிறது. அத்துடன் கார் பகிர்வுச் சேவைகளை மேலும் அதிகமானோர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதனால், இவ்விரு விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் பயனீட்டாளர் புகார்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் நவம்பர் 28ஆம் தேதி தெரிவித்தார்.
இது தொடர்பாக பங்காளிகளுடன் பணிக்குழு இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், விரைவில் புதிய திட்டங்களைப் பணிக்குழு அறிவிக்கும் என்றார்.
சங்கம் அங்கீகரித்த ஆய்வு ஒன்றில் லாப நோக்குடன் நுழைவுச்சீட்டு மறுவிற்பனை, வாகனப் பகிர்வுச் சச்சரவுகள், சுற்றுச்சூழலுக்குப் பங்காற்றுவதாகக் கூறி அதற்கு மாறாகச் செயல்படும் நிறுவனங்கள் ஆகிய மூன்று அம்சங்களிலும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் கூடுதல் நடவடிக்கை எடுக்கலாம் என்று கண்டறியப்பட்டது.
ஆய்வு இவ்வாண்டு பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டதில் 1,510 பங்கேற்பாளர்களில் கிட்டத்தட்ட பாதி, அதாவது 49.9 விழுக்காட்டினருக்கு நுழைவுச்சீட்டு மறுவிற்பனை கணிசமான ஒரு பிரச்சினையாகத் தோன்றியது.
வாகனப் பகிர்வுச் சேவை தொடர்பான சச்சரவுகள் தங்களுக்கு அக்கறைக்குரியதாக இருப்பதாக 38.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர். நீடித்த நிலைத்தன்மை தொடர்பில் ஏமாற்றும் நடவடிக்கைகள் அக்கறைக்குரியவையாக 32.3 விழுக்காட்டினர் சுட்டினர்.
இதற்கிடையே, பொழுதுபோக்குத் தொழில்துறைக்கு எதிரான புகார்கள் 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டது. இசை நிகழ்ச்சிகளும் இதர நிகழ்வுகளும் அதிகம் சிங்கப்பூரில் நடைபெற்று வருவதால் இந்த அதிகரிப்பு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பயனீட்டாளர் என்ற தங்களது உரிமை குறித்து மேலும் அதிகமானோர் விழிப்புணர்வு பெற்றுள்ளதாக திரு யோங் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்

