பாரம்பரிய நடவடிக்கைகளை வளர்க்கும், நிலைநிறுத்தும், ஊக்குவிக்கும் நோக்கில் ‘மரபுடைமைத் தொழில், பாரம்பரிய நடவடிக்கைகள் மற்றும் கலாசார அமைப்புக்கான அனைத்து அமைப்புப் பணிக்குழு’ நிறுவப்பட உள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்துள்ளார்.
சிங்கப்பூர் வரலாறு, கலாசார அடையாளங்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ள கலாசார வட்டாரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து மரபுடைமை சார்ந்த வர்த்தகங்களையும் பாரம்பரியம் சார் வாழ்வியலையும் வளர்த்தெடுக்க இந்தப் பணிக்குழு செயல்படும்.
கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங், தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் ஆகியோரது தலைமையில் இந்தப் பணிக்குழு செயல்படும் என்று தெரிவித்தார் அமைச்சர் லீ.
இதனை பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் கம்போங் கிளாம் ரமலான் சந்தை தொடக்க விழாவில் அவர் அறிவித்தார்.
“கம்போங் கிளாம், சைனா டவுன், லிட்டில் இந்தியா உள்ளிட்ட கலாசார வட்டாரங்களில் உள்ள மரபுசார் வர்த்தகங்கள் அவ்விடங்களின் அடையாளங்களைப் பிரதிபலிக்கின்றன. பல சவால்களைச் சந்திக்கும் அவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த நானும், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங்கும் ஆலோசித்து இந்த பணிக்குழுவை நிறுவ முடிவெடுத்தோம்,” என்றார் அமைச்சர் டெஸ்மண்ட் லீ.
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டாரங்களின் சிறப்புகளைத் தக்கவைத்து மேம்படுத்தும் நோக்கில் டாக்டர் ஃபைஷல் ஆலோசகராகவுள்ள கம்போங் கிளாம் கூட்டணி (Kampong Glam Alliance) அமைக்கப்பட்டது என்றும், அது கடந்த மூன்றாண்டுகளாக நகர மறுசீரமைப்பு ஆணையத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது என்றும் சொன்னார் அமைச்சர்.
கம்போங் கிளாம் கூட்டணி, துணை அமைச்சர் ஃபைஷலின் வழிகாட்டுதலின்கீழ் அதிகாரபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட பொறுப்புறுதியுடன் கூடிய வரையறுக்கப்பட்ட நிறுவனமாகியுள்ளது என்றும் அறிவித்தார் அமைச்சர் லீ. சமூகத்தின் வளங்களைச் சிறப்பாக நிர்வகிக்கும் மேம்பட்ட திறன்களுடன் கம்போங் கிளாம் சமூகத்தின் பிரதிநிதியாக இக்கூட்டணி விளங்கும் என்றார் அவர். முக்கியப் பங்காளிகளின் ஆதரவுடன் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் உட்பட பல திட்டங்களை இக்கூட்டணி ஒருங்கிணைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, நிதி அமைச்சு, மனிதவள அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, தேசியக் கலை மன்றம், தேசிய மரபுடைமைக் கழகம், சிங்கப்பூர் நில ஆணையம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கும் இந்தப் புதிய பணிக்குழு அடுத்த மூன்றாண்டுகளில் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
கம்போங் கிளாம் வட்டாரத்திலுள்ள பாரம்பரிய உணவகங்களைத் தக்கவைக்க அந்த வட்டாரத்திலேயே இடமாற்றம் மேற்கொள்ள ஆதரவளிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். பிற பாரம்பரிய வணிகங்களுக்குத் தேவையான ஆதரவுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
அப்பகுதிகளில் மரபுசார் வர்த்தகங்களையும் நடவடிக்கைகளையும் ஆதரிக்க அரசாங்கச் சொத்துகளைச் சிறந்த முறையில் பயன்படுத்தும் வழிமுறைகள் ஆராய்ந்து செயல்படுத்தப்படும். பாரம்பரிய வணிகங்கள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளைப் பணிக்குழு தொடர்ந்து மேற்கொள்ளும்.
“நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும் நிலைநிறுத்துவதும் கடந்த கால வரலாற்றை நினைவுகூர மட்டுமின்றி, எதிர்காலத்தை வடிவமைக்கவும் துணைபுரியும்,” என்றார் அமைச்சர் டெஸ்மண்ட் லீ.
கம்போங் கிளாம் ரமலான் சந்தை
புனித ரமலான் மாதத்தையொட்டி ஆண்டுதோறும் அமைக்கப்படும் கம்போங் கிளாம் சந்தை பிப்ரவரி 21ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இச்சந்தை, மார்ச் 25ஆம் தேதிவரை நீடிக்கும். இதனை அமைச்சர் டெஸ்மண்ட் லீ, உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம், ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
35 நாள்கள் நடைபெறும் இந்தச் சந்தையின் ஒரு பகுதியாக சுல்தான் பள்ளிவாசல் ஒளியூட்டு, உணவுக்கடைகள், பயிலரங்குகள் ஆகியன நடைபெறும்.
இவ்வாண்டு சிங்கப்பூர் சுதந்திரத்தின் 60ஆம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக கம்போங் சுற்றுலா, ‘டிரெஷர் ஹண்ட்’ எனப்படும் புதையல் வேட்டை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. ஏறத்தாழ 1,000 பங்கேற்பாளர்களுடன் இஃப்தார் விருந்தும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
80 உணவுக் கடைகள் 40 பிற கடைகளுடன் களைகட்டவுள்ள இச்சந்தைக்கு கடந்த ஆண்டைப் போலவே ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வருவாரகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் 60 ஆவது ஆண்டை முன்னிட்டு ரமலான் மாதத்தில் எளியோர்க்கு உதவும் நோக்கில் நடத்தப்பட்ட நிதித் திரட்டுத் தொடரோட்டம் மூலம் 4000 வெள்ளி திரட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
“இச்சந்தை பொதுமக்களுக்கான ஒன்றிணைவாக மட்டுமின்றி கலாசார மதிப்புகளை உணரும் வாய்ப்பாக அமையும்,” என்றார் திரு ஃபைஷல்.
மேலும், கம்போங் கிளாம் கூட்டணி அதிகாரத்துவமாக ஏற்படுத்தப்பட்ட பொறுப்புறுதியுடன் கூடிய வரையறுக்கப்பட்ட நிறுவனமாகியுள்ளது அரசாங்க, பிற நிறுவனங்களின் உதவியுடன் பல திட்டங்களைச் செயல்படுத்த வாய்ப்பளிக்கும் என்றார் அவர்.
“மரபுசார் வர்த்தகங்கள் சிங்கப்பூர் மரபுடைமையின் கூறுகளாகச் செயல்படும் அதே வேளையில் தற்காலத்திற்குப் பொருத்தமாகச் செயல்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதற்கு இந்தப் புதிய பணிக்குழு ஆதரவளிக்கும்,” என்றும் சொன்னார் ஃபைஷல்.