சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று தனி நாடாக மலர்ந்த ஆண்டை நினைவுகூரும் வகையில் நால்வர் இடம்பெற்றிருந்த அஞ்சல்தலைத் தொகுப்பு ஒன்று 1966ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பொதுவான வடிவமைப்புடன் கூடிய அந்த அஞ்சல்தலை ‘துடிப்பான சிங்கப்பூரை உருவாக்குவோம்’ (Build a Vigorous Singapore) என்ற வாசகத்தை ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்ற நான்கு அதிகாரத்துவ மொழிகளில் கொண்டிருந்தது.
அன்றுமுதல் சிங்கப்பூர் தனது சொந்த அஞ்சல்தலைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதே சமயம் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் பலரையும் ஈர்த்துள்ளது.
அஞ்சல்தலைகளைச் சேகரிப்பதன்வழி இதுபோன்ற வரலாறு, மரபு, எழுத்தறிவு மற்றும் உலகளாவிய விழிப்புணர்வை தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் எடுத்துச்செல்ல சிங்போஸ்ட் நிறுவனம் ‘இளம் அஞ்சல்தலை சேகரிப்பாளர் பள்ளித் திட்டம்’ (Young Philatelists School Programme) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செங்காங் கிரீன் தொடக்கப் பள்ளியில் ஓர் இணைப்பாட நடவடிக்கையாகத் தொடங்கும்.
தொடக்கநிலை 3லிருந்து மாணவர்கள் இந்த இளம் அஞ்சல்தலை சேகரிப்பாளர் சங்கத்தில் சேரலாம்.
சிங்போஸ்ட் நிலையத்தில் அக்டோபர் 9ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை, வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
செங்காங் கிரீன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் சிலரும் முதல்வர் காவ் போ டெக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் அஞ்சல்தலை சேகரிப்பு ஆர்வத்தை ஒரு சிறிய கண்காட்சிவழி பகிர்ந்தார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“ஒவ்வோர் அஞ்சல்தலையும் சிங்கப்பூரின் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளது. எங்கள் மாணவர்கள் அதைப் பாராட்ட வேண்டும்,” என்றார் திரு காவ்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேல் அஞ்சல்தலைகளைச் சேகரித்துவரும் திரு காவ், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் இயங்கும் சிங்கப்பூர் அஞ்சல்தலை ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
“இந்த புதிய இணைப்பாட நடவடிக்கை மூலம் அஞ்சல்தலை ஒட்டுவது, முகவரிகளை எழுதுவது அஞ்சல் நிலையங்களுக்குச் செல்வது போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுவர்,” என்று அவர் விளக்கினார்.
சிங்கப்பூரின் அறுபதாம் ஆண்டுக் கொண்டாட்டங்களைத் தொடரும் வண்ணம் ‘60 அஞ்சல்தலைகளில் 60 ஆண்டுகள்’ (60 Years in 60 Stamps) என்ற பொதுக் கண்காட்சி வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும்.
உலக அஞ்சல் நாளை நினைவுகூரும் விதமாகவும் இந்தக் கண்காட்சி புதிய தெமாசெக் கடைவீட்டில் அமைக்கப்படும்.
சுதந்திரத்துக்கு பிறகு வெளியான முதல் அஞ்சல்தலை உள்ளிட்ட பல சிறப்பு அஞ்சல்தலைகளைப் பொதுமக்கள் அங்குக் காணலாம்.
தேசிய அஞ்சல்தலை மின்னிலக்கக் களஞ்சியத்தைப் பள்ளிகளும் பொதுமக்களும் எளிதாக அணுகுவதை உறுதிசெய்யும் வகையில் தேசிய அஞ்சல்தலைகளின் மின்னிலக்க களஞ்சியம் ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்போஸ்ட் தெரிவித்தது.