சிங்கப்பூர்-நியூசிலாந்து ‘ஏஐ’ துறையில் கூடுதல் ஒத்துழைப்பு: பிரதமர் வோங்

சிங்கப்பூர்-நியூசிலாந்து ‘ஏஐ’ துறையில் கூடுதல் ஒத்துழைப்பு: பிரதமர் வோங்

2 mins read
இரு நாட்டுத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட சாதகமான வணிகச் சூழலை நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு நியூசிலாந்துப் பிரதமர் லக்சன் அழைப்பு
f016d2fb-8807-42ea-b193-c767216db829
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சிங்கப்பூரும் நியூசிலாந்தும் இணை திறனைக் கொண்டிருப்பதாக பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (மே 4) கூறினார். - படம்: சாவ் பாவ்
multi-img1 of 2

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சிங்கப்பூரும் நியூசிலாந்தும் இணைந்து புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (மே 4) தெரிவித்துள்ளார்.

மின்னிலக்கப் பொருளியலில் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் இணைத் திறனைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற சிங்கப்பூர் - நியூசிலாந்து தலைவர்களின் வருடாந்தரக் கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் வோங் உரையாற்றினார்.

நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சனின் சிங்கப்பூர்ப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற சிங்கப்பூர் - நியூசிலாந்து தலைவர்களின் வருடாந்தரக் கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் (வலமிருந்து மூன்றாவது), நியூசிலாந்துப் பிரதமர் லக்சன் (வலமிருந்து நான்காவது) உரையாற்றினார்.
ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற சிங்கப்பூர் - நியூசிலாந்து தலைவர்களின் வருடாந்தரக் கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் (வலமிருந்து மூன்றாவது), நியூசிலாந்துப் பிரதமர் லக்சன் (வலமிருந்து நான்காவது) உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இரு நாடுகளும் சிறிய, தடையற்ற பொருளியல்களைக் கொண்டிருப்பதால், மிகப்பெரிய ஏஐ மாதிரிகளை உருவாக்குவதைவிட, அவற்றின் பயன்பாடு, விநியோகத்தில் உலகில் முன்னணி வகிக்க முடியும் என்றார் அவர்.

தேசியச் செயற்கை நுண்ணறிவு மன்றம் மூலம் சிங்கப்பூர் ஏற்கெனவே உற்பத்தி, நிதி, சுகாதாரம், தளவாடத் துறைகளில் இத்தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதைப் பிரதமர் வோங் சுட்டிக்காட்டினார்.

மேலும், பசுமைப் பொருளியல், விநியோகச் சங்கிலி மீள்திறன் ஆகியவற்றிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

கொவிட்-19 பெருந்தொற்று, மத்திய கிழக்கு நெருக்கடி போன்ற உலகளாவிய பாதிப்புகள் புதிய இயல்பாக மாறிவிட்ட நிலையில், அரசாங்கங்களும் வணிகங்களும் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று திரு வோங் வலியுறுத்தினார்.

“நிச்சயமற்ற இந்தச் சூழலில், நம்பிக்கைக்குரிய பங்காளிகள் முன்னெப்போதையும்விட முக்கியம்,” என்றார் அவர்.

நியூசிலாந்து நிறுவனங்கள் தென்கிழக்காசியாவில் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்ய சிங்கப்பூர் சிறந்த தளமாக விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருநாட்டுத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட சாதகமான வணிகச் சூழலை நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு நியூசிலாந்துப் பிரதமர் லக்சன் அழைப்பு விடுத்தார்.

அரசாங்கங்கள் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குகின்றன, ஆனால் அதைச் செயல்படுத்தி உயிர் கொடுப்பது நிறுவனங்கள்தாம் என்று அவர் கூறினார்.

உலகளாவிய மாற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற சிறிய புத்தாக்கம் மிக்க, விரைவாக மாறக்கூடிய நாடுகள் தெளிவான இலக்குகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் சிறந்த முடிவுகளை எட்ட முடியும் என்றார் திரு லக்சன்.

சமூகத்தின் முன்னேற்றத்தில் வணிக, அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் நியூசிலாந்துப் பிரதமர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்