கல்வி முறையில் ஒருவருக்கொருவர் போட்டியிடும் சூழலை சீரமைக்கும் நோக்கில், தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு, நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டம் போன்ற அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அம்சங்களைக் கல்வி அமைச்சு விரிவாக ஆராயவுள்ளது.
போட்டியிடும் சூழலைக் குறைக்கும் நோக்குடன், அமைச்சின் ‘கல்விக் கலந்துரையாடல்கள்’ திட்டத்தின் அடுத்தகட்டம் தொடங்கவிருப்பதாக கல்வி இரண்டாம் அமைச்சர் டேவிட் நியோ அறிவித்தார்.
குறிப்பாக, மாணவர்களும் பெற்றோரும் அதிக அழுத்தத்தைச் சந்திக்கும் தொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிக்கு மாறும் கட்டத்தின்மீது இது கவனம் செலுத்தும்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சருமான திரு நியோ, கொள்கை ஆய்வுக் கழகத்தின் (ஐபிஎஸ்) ‘பெற்றோரும் கல்வியும் 2026’ கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) முடிவுரையாற்றியபோது இதைத் தெரிவித்தார்.
கல்வி முறையிலிருந்து போட்டியையும் மன அழுத்தத்தையும் முற்றிலுமாக அகற்றுவது அரசாங்கத்தின் நோக்கமன்று. மாறாக, ஆரோக்கியமற்ற போட்டி பிள்ளைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஆக்கிரமித்துவிடாமல் தடுப்பதே கல்வி அமைச்சின் முதன்மை இலக்கு என்றார் அவர்.
“இத்தகைய போட்டிகளைக் கல்வி முறையிலிருந்து முழுமையாக நீக்குவது நடைமுறைச் சாத்தியமற்றதுடன் பிள்ளைகளை எதிர்கால வாழ்க்கைக்குச் சிறந்த முறையில் தயார்படுத்தவும் உதவாது,” என்று திரு நியோ சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விரிவான கருத்துகளின் அடிப்படையில், போட்டியிடும் சூழலை ஊக்குவிக்கும் மூன்று முக்கிய அம்சங்கள் ஆராயப்படும்.
தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு, நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டம், அத்துடன் அனைத்துப் பள்ளிகளையும் வலுப்படுத்திப் பள்ளி நிலைகளுக்கிடையிலான வேறுபாடுகளைக் குறைத்தல் ஆகிய மூன்று அம்சங்களே அவை.
பிஎஸ்எல்இ சீர்திருத்தங்கள்
தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வை (பிஎஸ்எல்இ) நீக்குவது, ஒத்திவைப்பது, மதிப்பெண் பிரிவுகளை மாற்றியமைப்பது அல்லது உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்களைத் தரம் பிரிக்கும் முறையை மாற்றுவது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இருப்பினும், குலுக்கல் முறையால் பதற்றம் அதிகரிப்பது, வசிப்பிட ஒதுக்கீட்டால் சமூகக் கலப்பு குறைவது, தொடக்கப்பள்ளியிலிருந்தே நேரடியாக உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லும் முறையால் முதல் வகுப்பிலேயே போட்டி தீவிரமடைவது போன்ற மாற்று வழிமுறைகளின் தாக்கங்களையும் அமைச்சர் சுட்டினார்.
“உயர்நிலைப்பள்ளி ஒதுக்கீட்டிற்குப் பிஎஸ்எல்இ மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுவதே பெரும்பாலான அழுத்தத்திற்குக் காரணமாகிறது.
“விருப்பப்பட்ட பள்ளிகளில் இடம் கிடைப்பதை மதிப்பெண்களே தீர்மானிக்கும்போது, பெற்றோரால் தளர்வடைய முடியாது என்ற சூழல் உருவாகிறது,” என்று அமைச்சர் நியோ குறிப்பிட்டார்.
போட்டிப் போர்க்களமாக மாறிய டிஎஸ்ஏ
மாணவர்களின் கல்விசாராத் திறமைகளை அங்கீகரிக்கக் கொண்டுவரப்பட்ட நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டம் (டிஎஸ்ஏ), பல குடும்பங்களுக்குப் பதற்றத்தை அதிகரிக்கும் ‘இரண்டாவது போட்டிப் போர்க்களமாக’ மாறியுள்ளதாக அவர் கூறினார்.
இத்திட்டத்தின்கீழ் பயிற்றுவிக்கப்பட முடியாத இயல்பான திறமைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிப்பது, டிஎஸ்ஏ இடங்களைப் பள்ளிகளிடையே பரவலாக விநியோகிப்பது போன்ற மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
“திறமைகளை அடையாளம் காண்பதை உண்மையான ஆளுமை வளர்ச்சியோடு மீண்டும் இணைப்பதே எங்களது இலக்கு,” என்று அமைச்சர் கூறினார்.
பள்ளிகளை வலுப்படுத்துதல்
ஒரு சில ‘பிரபலமான’ பள்ளிகளை மட்டுமே நோக்கிய ஓட்டத்தைத் தடுக்க, கல்வி முறையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சிறந்த கற்பித்தலும் வளர்ச்சி வாய்ப்புகளும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர்.
பள்ளிகளுக்கிடையே சிறப்புத் திட்டங்கள், கூட்டு முயற்சிகள், தொழிற்பயிற்சி வாய்ப்புகள், முன்னாள் மாணவர் சங்கங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பலன்களை விரிவுபடுத்தலாம் என்றார் திரு நியோ.
“ஒரு குறிப்பிட்ட பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்பது வாழ்க்கையின் விதியைத் தேர்ந்தெடுப்பதாக உணரப்படக் கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
மாறவேண்டிய மனப்போக்கு
“பெரும்பாலான பெற்றோர் இப்போட்டியை விரும்புவதில்லை. ஆனால் பிள்ளைகள் இதிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாது எனக் கருதுவதால், யாரும் விரும்பாத ஓர் ஆரோக்கியமற்ற போட்டி உருவாகிறது,” என்று அமைச்சர் நியோ கூறினார்.
சிறு வயதிலிருந்தே சிறு சிறு மதிப்பெண் உயர்வுகளைத் துரத்துவது கற்றல் ஆர்வத்தைக் குறைத்துவிடும் என்ற அவர், கல்வியியல் அடைநிலைகளே முதன்மையானதாகக் கருதப்படும்போது பிள்ளைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் ஆளுமை உருவாக்கமும் புறந்தள்ளப்படும் அபாயம் உள்ளது என்றார்.
கல்வி அமைப்பில் மாற்றங்கள் செய்வதோடு நிறுத்திவிடாமல், நிறுவனங்களும் சமூகமும் கல்விச் சான்றிதழ்களைத் தாண்டித் திறமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“பள்ளிப் பருவத்தின் முதல் 15 ஆண்டுகளில் எட்டும் சாதனைகளைவிட, வாழ்நாள் முழுவதும் பணியிடத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஆற்றும் பங்களிப்பையே நமது வெற்றியாக வரையறுக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் நியோ.
