தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2026 தேசிய தின அணிவகுப்பு தேசிய விளையாட்டரங்கில் இடம்பெறும்

2 mins read
8d5037e4-e2c5-4325-87cc-ef463e885352
2024 ஜூலை 13ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் உள்ள தேசிய விளையாட்டரங்கு. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

அடுத்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு தேசிய விளையாட்டரங்கில் இடம்பெறும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் அறிவித்துள்ளார்.

அணிவகுப்பு பழைய தேசிய விளையாட்டரங்கில் முதன்முதலில் இடம்பெற்று 50 ஆண்டுகள் ஆகவுள்ளன. அடுத்த ஆண்டு அணிவகுப்பை புதிய தேசிய விளையாட்டரங்கில் நடத்துவதன் மூலம் கூடுதல் சிங்கப்பூரர்கள் அதை நேரில் காண முடியும்.

“கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2016ல் தேசிய தின அணிவகுப்பு தேசிய விளையாட்டரங்கில் இடம்பெற்றது. கொவிட்-19 பெருந்தொற்று சில திட்டங்களில் குறுக்கிட்டது. ஆனால், அடுத்த ஆண்டு புதுமையான அம்சங்களுடன் அணிவகுப்பு நடைபெறும்,” என்று அவர் விவரித்தார்.

சர்பானா ஜூரோங் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) நடந்த இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்புக்கான பாராட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் சான் சுன் சிங் சிறப்புரையாற்றினார்.

இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பு நிர்வாகக் குழுவைச் சேர்ந்த நிறுவனங்கள், ஆதரவாளர்கள், முக்கியப் பொறுப்பு வகித்தவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சர் சான் இந்தப் பாராட்டு நிகழ்ச்சியை நடத்தினார்.

பாராட்டு நிகழ்ச்சியில் 148 முக்கியப் பங்காளிகள், 31 தங்க விருது பெற்றவர்கள், 84 பெரும் பங்காற்றிய பங்காளிகள், 316 இணைப் பங்காளிகள் ஆகியோருக்கு அவர்களின் அர்ப்பணிப்புக்கும் பங்களிப்புக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

“தேசிய தின அணிவகுப்பு நாம் பாதுகாக்கும் பண்புகளை வெளிப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் அணிவகுப்பு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று மாறுபட்டிருக்கும். இது, சிங்கப்பூரர்கள் தொடர்ந்து புத்தாக்கத்தைத் தேடுபவர்கள் என்பதைக் குறிக்கிறது.

“ஒவ்வொரு முறையும் அணிவகுப்பு நிர்வாகக் குழுவினரும் பங்கேற்பாளர்களும் புத்தாக்கச் சிந்தனையுடன் யோசிப்பார்கள்,” என்று அமைச்சர் சான் தமது உரையில் குறிப்பிட்டார்.

அணிவகுப்பின் ஒத்திகை பற்றிப் பேசிய திரு சான், ஒவ்வொரு முறையும் அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து யோசிப்பது சிங்கப்பூரின் நிர்ணயிக்கும் தரத்தை வெளிக்காட்டுவதாகச் சொன்னார்.

“இவ்வாண்டு அணிவகுப்பு இன்னும் சிறப்புமிக்கது. அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்ற மனப்பான்மையை அது குறித்தது. இதுதான் சிங்கப்பூர் உணர்வு. ஒவ்வோர் அணிவகுப்பும் நமது புத்தாக்கச் சிந்தனை, தொடர்ந்து புதுமையாகச் செய்ய வேண்டுமென்ற உணர்வு ஆகியவற்றை உணர்த்துகிறது,” என்று அமைச்சர் சான் கூறினார்.

தற்காப்பு அமைச்சுக்கும் சிங்கப்பூர் ஆயுதப்படைக்கும் அப்பாற்பட்டு மக்களின் கூட்டு வலிமையே அணிவகுப்பை வெற்றிகரமாக்கியது என்ற திரு சான், ஆதரவாளர்கள், தளவாட ஊழியர்கள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியோர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

எஸ்ஜி61 புதிய யோசனைகளுடன் கொண்டாடப்படும் என்ற அமைச்சர் சான், புதுமையான சிந்தனைகள் எப்போதும் வரவேற்கப்படும் என்றும் இன்னும் சில ஆண்டுகளுக்குள் தயாராகிவிடும் தேசிய சேவை சதுக்கத்திலும் புதுவித நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் தெரிவித்தார்.

இன்றைய இளையர்கள் சிங்கப்பூரின் 100வது தேசிய தின அணிவகுப்பில் இடம்பெற அழைப்பு விடுத்த அவர், எஸ்ஜி100 கொண்டாட்டத்தில் இணைவதற்கான இலக்கை இளையர்கள் இப்போதே தொடங்கலாம் என்றார்.

குறிப்புச் சொற்கள்