சிங்கப்பூரில் உள்ள மூன்று பொதுச் சுகாதாரப் பராமரிப்பு குழுமங்களின் சேவைகள் நவம்பர் மாதத்திலிருந்து ஹெல்த்ஹப் என்ற ஒரே செயலியில் ஒருங்கிணைக்கப்படுகிறது.
என்எச்ஜி ஹெல்த், தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பு (என்யுஎச்எஸ்), சிங்ஹெல்த் ஆகியவை சிங்கப்பூரில் செயல்படும் மூன்று சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள்.
என்எச்ஜி ஹெல்த் குழுமத்தின்கீழ் டான் டோக் செங் மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, உட்லண்ட்ஸ் மருத்துவமனை, ஈசூன் சமூக மருத்துவமனை ஆகியவை செயல்படுகின்றன.
என்யுஎச்எஸ் குழுமத்தின்கீழ் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, அலெக்செண்ட்ரா மருத்துவமனை, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனை ஆகியவை இயங்குகின்றன.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை, கேகே மகளிர், சிறார் மருத்துவமனை ஆகியவை சிங்ஹெல்த் குழுமத்தின்கீழ் வருகின்றன.
மூன்று குழுமங்களின் சேவைகளை நெறிப்படுத்த ஹெல்த்ஹப் செயலி, என்எச்ஜி ஹெல்த் செயலி, என்யுஎச்எஸ் செயலி, சிங்ஹெல்த் ஹெல்த் படி செயலி ஆகிய பொதுச் சுகாதாரப் பராமரிப்புச் செயலிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்ட ஹெல்த்ஹப் செயலியில் ஒருங்கிணைக்கப்படும் என்று சைனேப்ஸ் என்ற தேசியச் சுகாதாரத் தொழில்நுட்ப அமைப்பு தெரிவித்தது.
குழுமங்களின் தனித்தனி செயலிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் நவம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்றும் வெவ்வேறு குழுமங்களின் செயலிகளைப் பயன்படுத்தும் நோயாளிகள் ஹெல்த்ஹப் செயலிக்கு மாற அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் சைனேப்ஸ் குறிப்பிட்டது.
புதிய மாற்றங்களால் நோயாளிகள் மருத்துவச் சந்திப்புகள், மருத்துவப் பதிவுகள், சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் ஆகியவை பாதிக்கப்படாது என்று ஹெல்த்ஹப் தனது இணையப்பக்கத்தில் விளக்கம் அளித்தது.
2027ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மூன்று குழுமங்களின் செயலிகளும் ஹெல்த்ஹப் செயலியுடன் இணைந்து செயல்படும். அதன்பின் குழுமங்களின் செயலிகள் செயல்படாது.
அதுகுறித்து என்யுஎச்எஸ் குழுமம் இம்மாதம் 29ஆம் தேதி நோயாளிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியுடன் தனது செயலி செயல்படாது என்று நோயாளிகளிடம் அது அறிவித்தது. மாறாக, ஹெல்த்ஹப் வழியாக அவர்கள் தொடர்ந்து சேவைகளைப் பெறலாம் என்று அது குறிப்பிட்டது.
சிங்ஹெல்த் குழுமத்தின்கீழ் செயல்படும் சிங்கப்பூர் தேசிய கண் நிலையம், நோயாளிகள் அனைவரும் தங்கள் மருத்துவப் பதிவுகளையும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளையும் குழுமத்தின் செயலியிலும் ஹெல்த்ஹப் செயலியிலும் பிப்ரவரி வரை பெற முடியும் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
