சுகாதார அறிவியல் ஆணையம் நடத்திய மின்சிகரெட்டுகளுக்கு எதிரான சோதனை நடவடிக்கையில் மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்யும் கட்டமைப்பு ஒன்றை அம்பலமாகியுள்ளது.
இதில் இரவு மதுக்கூடத்தின் நிர்வாகி ஒருவர் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 15ஆம் தேதியன்று கோல்மன் ஸ்திரீட்டிலுள்ள இரவு மதுக்கூடம் ஒன்றில் சோதனை நடத்தியதை அடுத்து இவ்வாறு நடந்துள்ளது.
மின்சிகரெட்டுகளை வைத்திருப்பது, விற்பது ஆகிய செயல்களின் தொடர்பில் சம்பந்தப்பட்ட இரவு விடுதியின் உரிமையாளர் விசாரணைக்கு உதவி வருவதாக ஆணையம், வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிட்ட தன் செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிட்டது.
எக்செல்சியர் கடைத்தொகுதியிலுள்ள கிளப் ஸ்லிம் இரவு மதுக்கூடத்தில் அந்த ஆடவர் பணிபுரிந்துள்ளார்.
“அந்த 45 வயது ஆடவரை ஆணைய அதிகாரிகள் பிடித்தனர். மதுக்கூட ஊழியர்களுக்கு மின்சிகரெட்டுகள் விற்றதை அவர் ஒப்புக்கொண்டார்,” என்று ஆணையத்திற்கான பேச்சாளர் தெரிவித்தார்.
ஆடவரின் வாகனத்தையும் வீட்டையும் பரிசோதித்த பிறகு அவர் தொடர்பான புதிய ஆதாரங்களையும் ஆணையம் கண்டுபிடித்துள்ளதாகப் பேச்சாளர் கூறினார்.
மதுக்கூடத்திற்குச் சென்றிருந்தவர்கள் மீதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
22 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று ஆடவர்களும் இரண்டு பெண்களும் மின்சிகரெட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கண்டுபிடிப்பு நடந்த இடத்திலேயே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜனவரி 2024க்கும் மார்ச் 2025க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஆணையம், 41 மில்லியன் வெள்ளிக்கும் அதிக பெறுமானமுள்ள மின்சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தது.