டிஸ்னி அட்வெஞ்சர் குரூஸ் சொகுசுக் கப்பலில் இம்மாதம் 16லிருந்து 19ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயணம் செய்தோரில் ஒன்பது பேரிடம் குடல் அழற்சிக்கு (gastroenteritis) ஆளான அறிகுறிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் எட்டுப் பேரும் கப்பல் ஊழியர் ஒருவரும் பாதிப்புக்கு ஆளாயினர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு சனிக்கிழமை (மார்ச் 28) கூறியது.
பாதிக்கப்பட்டவர்களிடையே மார்ச் 19லிருந்து 20ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நோய் அறிகுறிகள் தெரிந்தன. அவர்களில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அனைவரும் குணமடைந்துவிட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நிலவரப்படி அந்த ஒன்பது பேரிடம் மட்டும்தான் குடல் அழற்சி அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. சால்மொனெல்லா, நோரோவைரஸ் போன்ற கிருமிகளால் இப்பிரச்சினை ஏற்படக்கூடும்.
சரியான முறையில் உணவு கையாளப்படாதது அல்லது தயார்செய்யப்படாதது, உணவு அல்லது தண்ணீர் மாசுபட்டிருப்பது, சுற்றுச்சூழல் தூய்மையாக இல்லாதது அல்லது தனிநபர்கள் சுத்தத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்பது, குடல் அழற்சிக்கு ஆளானோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது, கிருமிகள் உள்ள பொருள்களைத் தொடுதல் போன்றவற்றால் இப்பிரச்சினை எழக்கூடும்.
டிஸ்னி குரூஸ் நிறுவனம், அதன் முதல் பயணத்தை இம்மாதம் 10ஆம் தேதி தொடங்கியது. டிஸ்னி குரூஸ் அட்வெஞ்சர் கப்பல் அதன் ஆகப் பெரிய கப்பலாகும். டிஸ்னி குரூசிடம் மொத்தம் எட்டுக் கப்பல்கள் உள்ளன.
டிஸ்னி குரூஸ் அட்வெஞ்சரில் 6,700 பயணிகள் வரை பயணம் செய்யலாம். அதில் 20 கூடங்கள் உள்ளன.
டிஸ்னி குரூஸ் அட்வெஞ்சர் ‘குரூஸ் டு நோவேர்’ எனும் பயணத்தை மேற்கொள்ளும். இது, எந்தத் துறைமுகத்திலும் நிற்காமல் செல்லும் சொகுசுக் கப்பல் பயணத்தைக் குறிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விவகாரம் குறித்துக் கூடுதல் தகவல் பெற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், டிஸ்னி குரூசைத் தொடர்புகொண்டுள்ளது.

