தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒன்பது பேர் காயமுற்ற விபத்து: பேருந்து ஓட்டுநர் தற்காலிகப் பணிநீக்கம்

1 mins read
85477665-c49d-490f-84c8-92bdaeff8e0a
விபத்து அப்பர் தாம்சன் ரோட்டில் நிகழ்ந்தது. - படங்கள்: Bing Callao-Loh / Danny Ong / ஃபேஸ்புக்

இரு பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் தொடர்பான சாலை விபத்தில் காயமுற்ற ஒன்பது பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 8) அப்பர் தாம்சன் ரோட்டில் நிகழ்ந்த அந்த விபத்து தொடர்பில் டவர் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டவர் டிரான்சிட் இயக்கும் பேருந்து சேவை 980 ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்து சேவை 166ன் மீது மோதியதால் விபத்து நேர்ந்தது. பேருந்து சேவை 166 எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நடத்தும் சேவையாகும்.

இதன் தொடர்பில் பேருந்து சேவை 980ஐ ஓட்டிய 57 வயது ஆடவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்த விசாரணை நடைபெறும் காலகட்டத்துக்கு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விபத்து நிகழ்ந்த பேருந்து நிறுத்தத்தில் உள்ள தடுப்புகள் ஒன்றின் மீதும் அப்பேருந்து மோதியதாக டவர் டிரான்சிட் நிறுவனத்தின் மூத்த தொடர்பு அதிகாரி வேரா லிம் தெரிவித்தார். அந்தப் பேருந்தில் பயணம் செய்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டோரில் அடங்குவர்.

அந்தப் பேருந்தில் இருந்த எஞ்சிய 18 பயணிகள் வேறு பேருந்தில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்