புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒன்பது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிக் கடிதங்களை வியாழக்கிழமை (ஜனவரி 8) அன்று இஸ்தானாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
ஜனவரி 12ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது அவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வர்.
இதுகுறித்து பிரதமர் லாரன்ஸ் வோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், “ஒன்பது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள். வணிகம், தொழிலாளர் இயக்கம், சுகாதாரம், விளையாட்டு, கல்வித்துறை ஆகியவற்றில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்களின் கண்ணோட்டங்கள் நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்களுக்கு வழி வகுக்கும்.
“மிகவும் சிக்கலான உலகில் நாம் பயணம் செய்து சிங்கப்பூர் அடைந்துள்ள வளர்ச்சியின் அடுத்த கட்டத்தைப் பட்டியலிடும் இவ்வேளையில் அவர்களின் பங்களிப்புகளை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
திரு அசார் ஓத்மான், இணைப் பேராசிரியர் கென்னத் கோ டோ சுவான், டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு, இணைப் பேராசிரியர் டெரன்ஸ் ஹோ வை லுயென், திருவாட்டி குவா பூன் தெங், திரு மார்க் லீ கீன் ஃபை, டாக்டர் நியோ கோக் பெங், பேராசிரியர் கென்னத் பூன் கின் லூங், திரு சஞ்சீவ் குமார் திவாரி ஆகியோர் அந்த ஒன்பது பேர்.
2023 முதல் 2025 வரை நியமன நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய திரு மார்க் லீயைத் தவிர, மற்ற எட்டுப் பேரும் இப்பதவிக்குப் புதியவர்கள்.

