மோசடிக் கும்பல்களுக்கு உதவி; ஒன்பது பேர்மீது வழக்கு

2 mins read
2c1ba9c2-37c2-4720-8d26-2275065a2f44
மோசடிக் குற்றங்களில் ஈடுபடும் கும்பலுக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படும் (இடமிருந்து) அசுவான், சிண்டி யாப்,  நூர்சுலைனி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடி குற்றங்களில் ஈடுபடும் கும்பலுக்குத் தங்களது வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் சிங்பாஸ் விவரங்களையும் வழங்கிய சந்தேகத்தில் ஒன்பது பேர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நேற்று (ஜூன் 2) நீதிமன்றத்தில் ஆறு ஆண்கள்மீதும் 3 பெண்கள்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆறு ஆண்கள்மீது 2க்கும் 19க்கும் இடையிலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

முகம்மது சைஃபுல்லா அசுவான், 27, யுவன் திருமாறன், 24, அமர்ஜித் சிங் ஜுகிந்தர் சிங், 50, அங் யோங் ஹான், 19, அடி ஆமின் முகம்மது, 50, லீ ஜூன் சாய், 25 ஆகியோர் அவர்கள்.

மூன்று பெண்கள்மீது ஒன்று முதல் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சிண்டி யாப் சிஹான், 32, கூ யுன் சுவான், 32, நூர்சுலைனி சுலைமான், 41 ஆகியோர் அவர்கள்.

மோசடிகளுக்கு உதவியர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 41 பேர்மீது இந்த வாரம் குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது. தற்போது அவர்களில் இந்த ஒன்பது பேர் உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

அரசாங்க ஊழியர்கள்போல் நாடகமாடுவது, வாடகை மோசடி, வேலை மோசடி, நண்பர்களைப் போல நடித்து மோசடி, இணைய மோசடி உள்ளிட்ட பல மோசடிகளில் இந்த மோசடிக் கும்பல் ஈடுபட்டுள்ளது.

“குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் 41 பேர்களில் பலர் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களையும் சிங்பாஸ் விவரங்களையும் வழங்கினால் 9,000 வெள்ளி வரை பணம் கிடைக்கும் என்று நம்பி உதவியுள்ளனர். அவர்களுக்கு அந்தப் பணமும் கிடைக்கவில்லை,” என்று காவல்துறை தெரிவித்தது. மோசடிகளுக்கு வங்கி, சிங்பாஸ் விவரங்களைக் கொடுத்து உதவுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்

சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு மட்டும் 1.1 பில்லியன் வெள்ளி நிதி மோசடியால் இழப்பு ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டு அது 651.8 மில்லியன் வெள்ளியாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்