சிங்கப்பூரிலுள்ள தனது ஊழியரணியில் ஐந்து விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்துள்ளதாகத் தளவாடத்துறை நிறுவனமான நிஞ்சா வேன் திங்கட்கிழமை (ஜூலை 1) தெரிவித்தது.
தங்ளினுக்கு அருகே கே சியாங் சாலையில் செயல்பட்டுவரும் அதன் தலைமையகத்தில் கிட்டத்தட்ட 450 பேர் பணியாற்றி வந்ததாகச் சொல்லப்பட்டது. சிங்கப்பூரில் அதன் தொழில்நுட்பப் பிரிவில் மட்டும் ஏறக்குறைய 100 பேர் வேலைசெய்து வந்ததாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் நிஞ்சா வேன் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் ஏறக்குறைய 4,500 ஊழியர்களைக் கொண்டுள்ளதாக ‘லிங்க்டின்’ தளம் மூலம் தெரியவருகிறது.
இந்தியாவின் ஹைதராபாத் நகரிலும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது.
முன்னதாக, இவ்வாண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தனது தொழில்நுட்பப் பிரிவில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினரை அந்நிறுவனம் ஆட்குறைப்பு செய்தது. மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்திற்கு முதல்நாள் அந்நடவடிக்கை இடம்பெற்ற நிலையில், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) அதனைச் சாடியது.
இந்நிலையில், அண்மைய நடவடிக்கையின்மூலம் வேலை இழந்தவர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய ஒவ்வோர் ஆண்டிற்கும் ஒரு மாதச் சம்பளம் என்ற கணக்கில் இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பதாக நிஞ்சா வேன் நிறுவனப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிஞ்சா வேன் வியட்னாமிலும் ஆட்குறைப்பு செய்துள்ளதாக அறியப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
ஆயினும், மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை, ஆட்குறைப்பு நடவடிக்கையால் சிங்கப்பூர் மட்டும் பாதிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு நிஞ்சா வேன் பதிலளிக்க மறுத்துவிட்டதாக அச்செய்தி குறிப்பிட்டது.

