சிங்கப்பூரில் இதுவரை நிபா கிருமித்தொற்று கண்டறியப்படவில்லை என்றும் பங்ளாதேஷின் தொற்று நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது என்றும் சிங்கப்பூர் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் (சிடிஏ) தெரிவித்துள்ளது.
பங்ளாதேஷின் நவோகான் மாவட்ட ராஜ்ஷாஹியில் நிபா தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்காளத்திலும் இருவர் நிபா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரு நாடுகளின் கிருமித்தொற்றுடன் தொடர்புடைய சம்பவங்கள் சிங்கப்பூரில் பதிவாகவில்லை என்று சனிக்கிழமை (பிப்ரவரி 7) வெளியிட்ட அறிக்கையில் அந்நிலையம் குறிப்பிட்டது.
கடந்த ஜனவரியில் வடக்கு பங்ளாதேஷில் நிபா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உயிரிழந்ததாக உலகச் சுகாதார நிறுவனம் பிப்ரவரி 6ஆம் தேதி அன்று கூறியது.
தற்போது பங்ளாதேஷின் தொற்றுச் சம்பவங்கள், இந்தியாவின் மேற்கு வங்காள சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரமோ, பங்ளாதேஷில் அந்தக் கிருமி மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதாகவோ தகவல் இல்லை. இரு நாடுகளிலும் சமூக அளவில் அத்தொற்று பரவவில்லை என்பதை சிடிஏ சுட்டிக்காட்டியது.
கடந்த ஜனவரி 28ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் நிபா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொதுச் சுகாதார நடவடிக்கைகளை சிடிஏ முடுக்கிவிட்டுள்ளது.
நிபா தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பது, சிங்கப்பூரில் நுழையும் தறுவாயில் பயணிகளுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்குவது அவற்றில் அடங்கும்.
உலகளவில் நிபா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறிய நிலையம், அதற்கேற்ப தற்போதைய பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்படும் என்றது.
தொடர்புடைய செய்திகள்
பிப்ரவரி 3ஆம் தேதி மனிதவள அமைச்சும், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து சிங்கப்பூருக்கு வரும் புதிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீவிரமாக மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாள்தோறும் உடல் வெப்பநிலையைச் சோதிப்பது கட்டாயம் என்று கூறியிருந்தது.
சிங்கப்பூருக்கு வந்தவுடன் 14 நாள்களுக்கு தங்களுடைய உடல் வெப்பநிலையையும் அறிகுறிகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் தலைவலி போன்ற தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனைத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியது
அது மட்டுமல்லாமல், காய்ச்சல், தலைவலி, வாந்தி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், வலிப்பு, குழப்பமடைதல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவ உதவியைப் பெறுமாறும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்திற்குச் சென்று வரும் ஊழியர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

