நிபா கிருமி பாதிப்பு: வீட்டுப் பணிப்பெண்களுக்கு அறிவுரை வழங்க மனிதவள அமைச்சு வலியுறுத்து

நிபா கிருமி பாதிப்பு: வீட்டுப் பணிப்பெண்களுக்கு அறிவுரை வழங்க மனிதவள அமைச்சு வலியுறுத்து

2 mins read
c775f47d-c0f1-422b-9a43-013654ddd2aa
ஜகார்த்தாவின் சுகர்னோ ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் வெப்பநிலை சோதனைப் பகுதியில் பயணிகள் நடந்து செல்கின்றனர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

நிபா கிருமித் தொற்று பாதிப்புள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பணிப்பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை அறிவுரைகளை வழங்குமாறு முதலாளிகளை மனித வள அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்த அறிவுறுத்தல் ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதில், தங்களது பணிப்பெண்களை வெளவால்கள், பன்றிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

முழுமையாகச் சமைக்கப்பட்ட உணவுகளை உண்ணும்படியும் கீழே விழுந்த பழங்களை உண்ணக் கூடாது என்றும் கைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வது போன்ற நல்ல சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணத்தின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ பணிப்பெண்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும் அமைச்சு வலியுறுத்தி உள்ளது.

சிங்கப்பூர் தொற்றுநோய் நிறுவனம் (சிடிஏ) கூறும்போது, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா கிருமி பாதிப்பால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அணுக்கமாகக் கவனித்து வருவதாகக் கூறியது.

கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் 7வது நிபா கிருமித் தொற்று சம்பவம் பதிவாகி உள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

தற்போது இந்தப் பாதிப்பு மேற்கு வங்க மாநிலத்திற்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிங்கப்பூரிலும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளிலும் அவசர காலப் பிரிவுகளிலும் நோய்த்தொற்று அறிகுறிகள் குறித்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

டூயூக்-என்யூஎஸ் மருத்துவப் பள்ளியின் தொற்று நோய் வல்லுநரான பேராசிரியர் வாங் லின்ஃபா கூறுகையில், “இந்தத் தொற்று தற்போதுள்ள பகுதியைத் தாண்டி வேறு பகுதிகளுக்குப் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

“இந்தியா, பங்ளாதேஷில் இதுபோன்ற சிறிய அளவிலான பாதிப்புகள் ஆண்டுதோறும் நிகழ்கின்றன,” என்றார்.

இது மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவுவது என்பது மிக அரிதானது என்றும் கூறிய அவர், பாதிக்கப்பட்டவருடன் நீண்ட காலத் தொடர்பில் இருந்தால் மட்டுமே பரவ வாய்ப்புள்ளதாகவும் விளக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்