சிங்கப்பூரின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான திரு கோ செங் லியாங், ஆகஸ்ட் 12ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 98.
அனைத்துலக செல்வந்தர்களின் வருடாந்திர ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த திரு கோவின் மதிப்பு கிட்டத்தட்ட யுஎஸ் $13 பில்லியன் (16.7 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி).
சுவர்களுக்கான சாயத்தைத் தயாரிக்கும் ‘வுதலம்’ (Wuthelam) குழுமத்தைத் தொடங்கிய திரு கோ, இன்று காலை குடும்பத்தினர் அருகில் இருந்தவாறு காலமானதாக அவரது குடும்பம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
திரு கோ ஜப்பானின் நிப்போன் சாய நிறுவனத்தில் பெரும்பங்கை வகித்தார்.
வறுமையில் வளர்ந்த திரு கோ, ரிவர் வேலி சாலையில் உள்ள கடைவீட்டில் தமது வாழ்க்கையின் முதல் 12 ஆண்டுகளைக் கழித்தார்.
பெற்றோர், மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன் ஆகியோருடன் மாதம் $3 வாடகை அறையில் திரு கோ தங்கினார்.
இரண்டாம் உலகப் போர் மூண்டதை அடுத்து ஜோகூரில் உள்ள மூவாருக்குத் திரு கோவை அவரது பெற்றோர் அனுப்பிவைத்தனர். 1943ஆம் ஆண்டு சிங்கப்பூர் திரும்பும் வரை அவர் சகோதரியின் கணவருடன் மீன்வலைகளை விற்றார்.
பின் காற்றூட்டப்பட்ட நீரை விற்பனை செய்யும் வர்த்தகத்தைத் தொடங்கிய திரு கோ அதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வன்பொருள் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
1949ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவம் போர்ப் பொருள்களை ஏலத்திற்கு விற்றபோது திரு கோ பீப்பாய் நிறைய சாயத்தை மலிவான விலைக்கு வாங்கினார்.
ரசாயனங்கள் குறித்த சீன அகராதியை வைத்திருந்த அவர், பல வண்ணங்களையும் திரவங்களையும் கலந்து சொந்த புறாச் சின்ன சாயங்களை உருவாக்கினார்.
1950ஆம் ஆண்டு கொரியப் போர் தொடங்கியதால் சிங்கப்பூருக்கு இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டன. அதில் திரு கோவின் சாய வர்த்தகம் தலைதூக்கியது.
படிப்படியாக வர்த்தகம் வளர்ந்து ஜப்பானின் நிப்போன் சாய நிறுவனத்துடன் பங்காளியானது.
1974ஆம் ஆண்டு ‘வுதலம்’ ஹோல்டிங்ஸ் குழுமத்தைத் திரு கோ தொடங்கினார். தற்போது அது நிப்போன் சாய நிறுவனத்தில் 60 விழுக்காட்டுப் பங்கை வகிக்கிறது.

