கொடிகட்டிப் பறக்கும் கம்பிவண்டிகளின் வரலாற்றைப் பறைசாற்றும் கண்காட்சி

கொடிகட்டிப் பறக்கும் கம்பிவண்டிகளின் வரலாற்றைப் பறைசாற்றும் கண்காட்சி

1 mins read
48865b69-8fb0-43d1-be97-01486491ef07
கம்பிவண்டி கண்காட்சியில், பயன்பாட்டில் இல்லாத இரண்டாம் தலைமுறை கம்பிவண்டியிலிருந்து புகைப்படத்துக்குக் காட்சிதரும் பெண் ஒருவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் கம்பிவண்டிகளின் 50 ஆண்டுகால வரலாற்றைப் பறைசாற்றும் புதிய கண்காட்சி ஒன்று விவோசிட்டி கடைத்தொகுதியில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) தொடங்கப்பட்டது.

அக்கடைத்தொகுதியின் முதல் தளத்தில் 2 மீட்டருக்கும் 22 மீட்டருக்குமான பரப்பளவில் அமைந்துள்ள அக்கண்காட்சி, 1974ல் கம்பிவண்டி சேவை தொடங்கப்பட்டது முதல் அண்மைய மேம்பாடுகள் வரையிலான அதன் வரலாற்றை எடுத்துரைக்கிறது.

பயன்பாட்டில் இல்லாத, புதுப்பிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை கம்பிவண்டி, அக்கண்காட்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று.

வருகையாளர்கள் அக்கம்பிவண்டி கார் பெட்டிக்குள் அமர்ந்து, அதிலுள்ள திரையில் காட்டப்படும் அந்தக் காலத்து அசல் காணொளி மூலம், மவுண்ட் ஃபேபர் முதல் செந்தோசா வரையிலான முதல் பயணத்தை அனுபவிக்கலாம்.

தேசிய நூலக வாரியத்தின் ‘நூலகங்கள், வரலாற்று ஆவணத் தொகுப்புகளின் திட்ட வரைவு 2025’இன் ஓர் அங்கமாக அக்கண்காட்சி இடம்பெறுகிறது.

கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டதற்குப் பிறகு பேசிய வாரியத்தின் திட்டமிடுதல், மேம்பாட்டுப் பிரிவுக்கான துணை இயக்குநர் வின்ஸ்டன் டான், “கடைத்தொகுதிக்கு வருவோருக்கு இங்கு கண்காட்சி இருப்பது பற்றித் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அது சுவாரசியமாக இருப்பதாக அவர்கள் நினைக்கலாம். சிறுவர்கள் முதல் பெரியோர் வரை நினைவில் கொள்ளும் முக்கியச் சின்னங்களில் ஒன்றாக கம்பிவண்டிகள் விளங்குகின்றன,” என்றார்.

ஐந்து தலைமுறைகளாக சிங்கப்பூரின் கம்பிவண்டிகளின் உருமாற்றத்தை வர்ணிக்கும் ஐந்து திரைகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

விவோசிட்டி வெஸ்ட் பொலிவார்ட் 1ல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அக்கண்காட்சி திறந்திருக்கும்.

குறிப்புச் சொற்கள்