மலேசியாவில் கண்டறியப்பட்ட எக்ஸ்எஃப்ஜி (XFG) என்ற புதிய வகை கொவிட்-19 கிருமி சிங்கப்பூரிலும் தற்போது முதலிடத்தில் உள்ளபோதும் கூடுதல் பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமில்லை என்று தொற்றுநோய் அமைப்பு கூறியுள்ளது.
இதற்கு முன் இருந்த கொவிட்-19 கிருமி வகைகளைவிட எக்ஸ்எஃப்ஜி வகை கிருமியால் பாதிக்கப்படுவோர் கடுமையாக நோய்வாய்ப்படுவார்கள் என்பதற்கு இதுவரை எந்தச் சான்றும் இல்லை என்று அமைப்பு குறிப்பிட்டது.
புதிய எக்ஸ்எஃப்ஜி வகை கிருமி சிங்கப்பூரில் முதன்முறையாக ஏப்ரலில் கண்டறியப்பட்டது என்று தொற்றுநோய் அமைப்பு சொன்னது.
இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதிக்கு இடைப்பட்ட வாரத்தின்போது உள்ளூரில் சேகரிக்கப்பட்ட மூன்றில் இரண்டு பங்கு மாதிரிகளில் எக்ஸ்எஃப்ஜி வகை கிருமி கண்டறியப்பட்டது.
“சமூகத்தில் ஏற்பட்ட கொவிட்-19 தொற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதே வாரம் குறைவாக இருந்தது,” என்று தொற்றுநோய் அமைப்பு குறிப்பிட்டது.
தற்போது, கொவிட்-19 கிருமியைக் கட்டுப்படுத்த ஒப்புதல் பெற்ற தடுப்பூசி புதிய வகை கிருமிக்கு எதிராக ஒருவரைப் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது என்றும் அது சுட்டியது.
60 வயதுக்கும் மேற்பட்டோர், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், மருத்துவ ரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடியோருடன் வாழும் அல்லது வேலை செய்யும் தனிநபர்கள் என கொவிட்-19 கிருமியால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தில் உள்ளோர் கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது.
லேசான அல்லது கடுமையான சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் அறிகுறிகள் சரியாகும்வரை வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அத்தகையோர் வீட்டுக்கு வெளியில் செல்லும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றுவதுடன் முகக்கவசமும் அணிய வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
தொற்றுநோய் நிலையம் உள்ளூரில் அனைத்துலக ரீதியிலும் கொவிட்-19 நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்துவருவதாகத் தெரிவித்தது.