தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேநவ் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது: துணைப் பிரதமர் கான்

2 mins read
d21b3a28-7f23-4b10-a59a-0bd4698091e2
ஒவ்வொரு பேநவ் பரிவர்த்தனைக்கும் 10 காசுக் கட்டணம் வசூலிக்கப்படுவதன் தொடர்பில் சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்துடன் சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் பேசிவருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேநவ் (PayNow) பரிவர்த்தனையைப் பயன்படுத்தும் வணிகர்கள், பயனீட்டாளர்களிடம் அதற்காகக் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல்லாண்டுகளாகவே சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் ஒவ்வொரு பேநவ் பரிவர்த்தனைக்கும் 10 காசுக் கட்டணத்தை வசூலிக்கிறது.

அதன் தொடர்பில் சிங்கப்பூர் வங்கிகள் சங்கம், சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்துடன் பேசிவருவதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறினார். பேநவ் திட்டத்தின் உரிமை வங்கிகள் சங்கத்திடம் உள்ளது.

பொத்தோங் பாசிர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அலெக் இயோ கேட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்தபோது வர்த்தக, தொழில் அமைச்சரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவருமான திரு கான், அதனைச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) தெரிவித்தார்.

சிங்கப்பூர் பூல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் எவற்றுக்காவது பேநவ் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் கட்டணம் பெற விதிக்கப்பட்ட தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்று திரு இயோ கேட்டிருந்தார்.

பேநவ் வழியாகக் கட்டணம் செலுத்த விரும்பும் பயனீட்டாளர்களிடம் வணிகர்கள் கூடுதலாகத் தொகை எதனையும் பெறுவதற்கு வங்கிகளின் விதிமுறைகளில் இடமில்லை என்று திரு கான் சொன்னார்.

பயனீட்டாளர்கள் வணிகர்களுக்குச் செலுத்தும் தொகைக்கான பரிவர்த்தனைக் கட்டணங்களைப் பெரிய வங்கிகள் தள்ளுபடி செய்வதாக அவர் குறிப்பிட்டார். பெற்ற தொகையை உறுதிசெய்வதற்கான கூடுதல் சேவைக்கு வணிகர்கள் குறைந்த கட்டணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றார் துணைப் பிரதமர் கான்.

தற்போது சிங்கப்பூரில் 300,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பேநவ் திட்டத்தைப் பயன்படுத்தப் பதிவுசெய்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

சிங்கப்பூரில் விளையாட்டு, அதிர்‌‌ஷ்டக்குலுக்கு, குதிரைப் பந்தயங்களை நடத்துவதற்குச் சட்டப்படி உரிமை பெற்ற ஒரே நிறுவனம் சிங்கப்பூர் பூல்ஸ். அது பந்தயப் பிடிப்புக் கழகத்தின் கிளை நிறுவனம். நிதியமைச்சின் ஆணை பெற்ற கழகங்களின்கீழ் அது வருகிறது.

பந்தயம் கட்டுவது, பரிசைப் பெறுவது உள்ளிட்ட ஒவ்வொரு பேநவ் பரிவர்த்தனைக்கும் 10 காசுக் கட்டணம் பொருந்தும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் இணையத்தளம் கூறுகிறது.

10 காசுக் கூடுதல் கட்டணம் எவ்வளவு காலமாக வாங்கப்படுகிறது என்றும் இதுவரை எவ்வளவு தொகை அவ்வாறு பெறப்பட்டது என்றும் அதைப் பயனீட்டாளர்களிடம் திருப்பிக் கொடுக்கும் எண்ணம் இருக்கிறதா என்றும் சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் கேட்டிருந்தது. நிறுவனம் அந்தக் கேள்விகளுக்குப் பதில் தரவில்லை.

கூடுதல் கட்டணம் என்பது புதிய நடைமுறை அல்ல என்றார் சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர். வங்கிகள் சங்கம் விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் முன்னரே அது நடப்பில் இருந்ததாக அவர் சொன்னார்.

விதிமுறைகள் சென்ற ஆண்டு (2024) மார்ச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்