சிங்கப்பூரின் விமான நிலையங்களுக்கு அருகே சூரியசக்தித் தகடுகளைப் பொருத்த, வர்த்தக நிறுவனங்களும் கட்டட உரிமையாளர்களும் இனி சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை.
அக்டோபர் 1ஆம் தேதி இது நடப்புக்கு வரும்.
சூரிய மின்சக்தித் தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் புதிய சூரியசக்தித் தகடுகள் கண்ணைக் கூசும் ஒளி அதிகமில்லாதனவாக இருக்கும் என்பது ஆணையத்தின் மறுஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், அவற்றைப் பொருத்துவதால் விமான நிலையச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய மாற்றம் குறித்துப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், செப்டம்பர் 17ஆம் தேதி அறிவித்தார். சொத்துச் சந்தை மேம்பாட்டாளர் சங்கத்தின் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தணிப்பதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வுக்குப் பிறகு புதிய முயற்சிகளில் இந்த மாற்றமும் அடங்கும்.
சூரியசக்தித் தகடுகளிலிருந்து வெளியாகும் கண்ணைக் கூசும் ஒளி, விமானிகளுக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்தினருக்கும் பாதிப்பு உண்டாக்கும் என்ற கவலையை முன்னிட்டு இதுவரை விமான நிலையத்திற்கு அருகே இத்தகடுகளைப் பொருத்த, ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவேண்டியது கட்டாயமாக இருப்பதை அமைச்சர் சீ சுட்டினார்.
இவ்வாறு தகடுகளைப் பொருத்த இரண்டு மாதம் பிடிக்கும் என்றும் ஆலோசகரிடமிருந்து இதற்கான மதிப்பீட்டு அறிக்கையைப் பெற ஏறத்தாழ $3,000 செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய மாற்றத்தின் மூலம் இந்த நேரமும் பணமும் மிச்சமாகும் என்றார் அவர்.
வர்த்தக நிறுவனங்களுக்கு உதவும் இதர புதிய திட்டங்களில், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் விதிகளை அறிந்த செயற்கை நுண்ணறிவுப் பேசுசெயலி (chatbot), சாலை வடிவமைப்புப் பரிந்துரைக்கான மாதிரிப் படிவம் போன்றவையும் அடங்கும்.