உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மின்தடை ஏதுமில்லை: ஐசிஏ

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மின்தடை ஏதுமில்லை: ஐசிஏ

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Nov 2026 - 6:40 pm

1 mins read

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் புதன்கிழமை (நவம்பர் 4) மின்தடை ஏதும் ஏற்படவில்லை என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் ஏற்பட்ட மின்தடையால் கடற்பாலத்தில் கடுமையான நெரிசல் உருவானதாக மலேசியாவின் ‘தி ஸ்டார்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஆணையம் மறுத்துள்ளது.

“பழைய உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் திட்டமிடப்பட்ட மின் பராமரிப்புப் பணிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றன. அந்நேரத்தில் அங்கு லாரிகளுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பிரதான உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அனுமதி தொடர்ந்தது.

“இதனால், கடற்பாலத்தில் சரக்கு வாகனங்களின் நெரிசல் அதிகரித்தது. பின்னர் பழைய சோதனைச்சாவடி மாலை 4 மணிக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியது,” என்று ஆணையம் விளக்கமளித்தது.

இதற்கிடையே, மலேசியப் பகுதியிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்த இரண்டு லாரிகள் மாலை 4.30 மணிக்கும் 6.30 மணிக்கும் அடுத்தடுத்து பழுதடைந்தன.

இதனால் மூன்று தடங்களில் ஒன்று முடக்கப்பட்டு, நெரிசல் மலேசியா வரை நீண்டது. மாலை உச்சநேரத்தில் இது நடந்ததால் போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமானது.

பழுதடைந்த முதல் லாரி இரவு 9.50 மணிக்கும், இரண்டாவது லாரி நள்ளிரவு 12.20 மணிக்கும் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்தத் தாமதங்கள் குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்