வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூர்க் குடும்பங்கள் செலுத்தவேண்டிய மின்சார, எரிவாயுக் கட்டணத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய காலாண்டின் மின்சார, எரிவாயு வரி விலைகளில் மாற்றம் இருக்காது.
காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத்தில் தொடர்ந்து ஒரு கிலோவாட்மணிக்கு (kWh) 28.12 காசாக இருக்கும் என்று எஸ்பி குழுமம் அறிக்கை மூலம் தெரிவித்தது. அதேபோல், எரிவாயுக் கட்டணம் தொடர்ந்து ஒரு கிலோவாட்டுக்கு 22.72 காசாக இருக்கும் என்று சிட்டி எனர்ஜி வேறோர் அறிக்கையில் தெரிவித்தது.
தாங்கள் குறிப்பிட்ட கட்டணத்தில் பொருள், சேவை வரியும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவை குறிப்பிட்டன.
சராசரியாக நாலறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் வசிக்கும் குடும்பம், மாதந்தோறும் 90.01 வெள்ளி மின்சாரக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, தற்போதைய காலாண்டில் செலுத்தப்படும் சராசரி கட்டணமாகும்.
மின்சாரக் கட்டணம், சராசரியாக 0.1 விழுக்காடு அதிகரித்து கிலோவாட்டுக்கு 0.04 காசாக இருக்கும். குடியிருப்பு இடங்கள் அல்லாதவற்றுக்கும் இது பொருந்தும்.

