சிங்கப்பூர் நாணய ஆணையம், சிங்கப்பூர் வெள்ளிக்கான கொள்கையை வியாழக்கிழமை (ஜனவரி 29) மாற்றவில்லை.
இது, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இவ்வாண்டுக்கான பணவீக்க முன்னுரைப்பை அதிகரித்தபோதும் ஆணையம் நாணயக் கொள்கையில் மாற்றம் செய்யவில்லை.
நாணயக் கொள்கை அறிக்கையில் ஆணையம் இத்தகவலை வெளியிட்டது.
மூலாதாரப் பணவீக்கம், எல்லா பொருள்களுக்குமான பணவீக்கம் ஆகிய இரண்டும் ஒன்றிலிருந்து இரண்டு விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று ஆணையம் முன்னுரைத்துள்ளது. முன்னதாக ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விகிதம் 0.5லிருந்து 1.5 விழுக்காடாக இருந்தது.
சராசரியாக 2026ஆம் ஆண்டு முழுவதும் மூலாதாரப் பணவீக்க விகிதம் தற்போது காணப்படுவதைவிடக் சற்று குறைவான வேகத்தில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளியல் வளர்ச்சி தொடர்ந்து எதிர்பார்க்கப்படுவதைவிட வலுவாக இருந்தால் சம்பள வளர்ச்சி அதிகமாகப் பதிவாகக்கூடும்; அதன் காரணமாக பயனீட்டாளர்கள் மேலும் செலவு செய்யக்கூடும் என்றும் அது பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஆணையம், நாணயக் கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறது. பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது காரணமாகும்.
கடந்த ஏப்ரலில் நாணயக் கொள்கை தளர்த்தப்பட்டது. ஆண்டுதோறும் நான்கு முறை ஆணையம் நாணயக் கொள்கையை பரிசீலித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
நாணயக் கொள்கையைப் பொறுத்தவரை பொதுவாக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கும். ஆனால், சிங்கப்பூர் நாணய ஆணையம் மாறுபட்டு மற்ற நாணயங்களுக்கு எதிராக சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பை வழிநடத்தி நாணயக் கொள்கையைக் கையாள்கிறது.
வர்த்தகத்தை அதிகம் சார்ந்திருக்கும் சிறிய பொருளியலாக சிங்கப்பூர் இருப்பது அதற்குக் காரணம்.
சிங்கப்பூர் வெள்ளி ஒவ்வொன்றிலும் 40 காசு இறக்குமதியாகும் பொருள்கள் மீது செலவிடப்படுகிறது. அதனால் உள்ளூர் வட்டி விகிதங்களைவிட நாணயச் செலாவணிதான் பணவீக்கத்தில் கணிசமான அளவு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

