அரசாங்கச் செயல்முறைகளிலோ சிங்கப்பூரின் அதிமுக்கியத் தகவல் உள்கட்டமைப்புகளிலோ ‘பிஎச்பி’ பாதுகாப்புக் குறைபாடுகள் பயன்படுத்தப்பட்டதற்கான எந்தவோர் ஆதாரமும் இல்லை என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் புதன்கிழமை (நவம்பர் 4) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டு இணையத்தளங்களில் பயன்படுத்தப்படும் ‘பிஎச்பி’ நிரலாக்க மொழியில் உள்ள முக்கியப் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து அக்டோபர் 21ஆம் தேதி தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, இணையத் தாக்குதல் மிரட்டல்களுக்கு மத்தியில் நிறுவனங்கள் உடனடியாக அக்குறைபாடுகளைச் சரிசெய்யுமாறு சிங்கப்பூர் அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.
அக்குறைபாடுகள் குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட செயல்முறைகளை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாப்பதற்காக ‘கவ்டெக்’ எனும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் அரசாங்க அமைப்புகளுடனும் அதிமுக்கியத் தகவல் உள்கட்டமைப்பு உரிமையாளர்களுடனும் இணைந்து செயல்பட்டதாக நாடாளுமன்றக் கேள்விகளுக்குப் பதிலளித்த திரு டான் கூறினார்.
பாதுகாப்பு மீறல்களோ சேவைத் தடங்கல்களோ கண்டறியப்பட்டுள்ளனவா என்று கேட்கப்பட்டதற்கு, ‘பிஎச்பி2ஷெல்’ (PHP2Shell) என ஒட்டுமொத்தமாக அறியப்படும் இரு குறைபாடுகள் அரசாங்கச் செயல்முறைகளிலோ அதிமுக்கியத் தகவல் உள்கட்டமைப்புகளிலோ பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று திரு டான் தெரிவித்தார்.
மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களால் நிர்வகிக்கப்படும் செயல்முறைகள் உட்பட, பாதுகாப்புக் குறைபாடுகளைச் சமாளிப்பதற்கான தற்போதைய விதிகள் போதுமானவையா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து மதிப்பீடு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.
