நிதிசார் நெறிமுறைகள் இல்லை, கவனத்துடன் வாக்களியுங்கள்: கோ மெங் செங்

நிதிசார் நெறிமுறைகள் இல்லை, கவனத்துடன் வாக்களியுங்கள்: கோ மெங் செங்

2 mins read
0410ebe5-c506-4e42-8a3c-d5e8c8e7910e
இயோ சூ காங் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) நடைபெற்ற மக்கள் சக்திக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் கோ மெங் செங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாட்டில் நிதிசார் நெறிமுறைகள் இல்லை என்பதால் கவனத்துடன் வாக்களிக்குமாறு அங் மோ கியோ குழுத்தொகுதி வாக்காளர்களுக்கு மக்கள் சக்தி கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங், 55, அறைகூவல் விடுத்துள்ளார்.

இயோ சூ காங் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) நடைபெற்ற மக்கள் சக்திக் கட்சியின் மூன்றாவது பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய திரு கோ, எதற்காக மக்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பட்டியலிட்டார்.

“நமக்கு முக்கிய விழுமியங்கள் தேவை. நாடாளுமன்ற அமைப்பை இயக்க நமக்கு அதிகாரப் பிரிப்பு தேவை. நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிகாரப் பிரிப்பை நிறைவேற்றுவேன்,” என்றார் திரு செங்.

“மக்கள் செயல் கட்சி சிங்கப்பூரை அச்சத்தில் உழலச் செய்கிறது. அச்சத்தில் கிடக்கும் தேசமாக மாற்றுவதற்கான தொலைநோக்கைக் கொண்டுள்ளது. அவர்களிடம் நிதிசார் நெறிமுறை இல்லை,” என்று சாடினார் திரு கோ.

இலவச உணவு வேண்டாம் என்று புறந்தள்ளிய கடும் உழைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நாடு சிங்கப்பூர் என்று குறிப்பிட்ட திரு கோ, மசெக ஒரு சாராரிடம் அதிக வரிவிதித்து, அதை ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகள் வடிவில் மற்றவர்களுக்கு நிதி வடிவில் திருப்பித் தருகிறது என்றார்.

பிரசாரக் கூட்ட மேடையில் உரையாற்றிய அக்கட்சியின் அங் மோ கியோ குழுத் தொகுதி வேட்பாளர் தாடியஸ் தாமஸ், 43, “அதிகரித்து வரும் செலவினங்களைச் சமாளிக்க இயலாமல் கட்டுப்படியாகக் கூடிய விலையில் மளிகைப் பொருள்கள் வாங்கவும், மலிவு விலையில் மருந்துகள் வாங்கவும் மூத்தோர் கடற்பாலத்தைக் கடந்து செல்லும் அவலம் நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதே மேடையில் முழங்கிய அக்கட்சியின் இளம் வேட்பாளர் வியர் நேதன், “அச்சமடையாதீர்கள். அனைவரும் அச்சமின்றி இருங்கள். எது சரியென்று தோன்றுகிறதோ அந்தக் கட்சிக்கே வாக்களியுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார்.

தற்போதைய அரசாங்கம் யாருடையது? மசெகவினுடையதா சிங்கப்பூரர்களுக்கு உரியதா? என்று கேள்வி எழுப்பிய மக்கள் சக்தி கட்சியினர், அதிகாரம் மக்களுடையதே எனவும், தவறாமல் மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்து வாய்ப்பளிக்கவும் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தலைமையில் அங் மோ கியோவில் மசெக அணி போட்டியிடும் நிலையில், இதற்குமுன் இல்லாத வகையில் அங் மோ கியோ குழுத்தொகுதியில் இம்முறை மும்முனைப் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்