சில்வியா லிம், ஃபைசால் மனாப்மீது மேல்நடவடிக்கை தேவையில்லை: இந்திராணி ராஜா

சில்வியா லிம், ஃபைசால் மனாப்மீது மேல்நடவடிக்கை தேவையில்லை: இந்திராணி ராஜா

2 mins read
aad1d4b7-1fd2-4d6b-af54-88bb86e65a4d
அவைத் தலைவர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றினார். - காணொளிப் படம்: நாடாளுமன்றம்

நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யுரைத்த பாட்டாளி கட்சியின் தலைவர்களான சில்வியா லிம், ஃபைசால் மனாப் ஆகியோருக்கு எதிராக நாடாளுமன்றம் மேலும் எந்தவொரு சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று அவைத் தலைவர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான அமைச்சர்நிலை அறிக்கையை அவர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

இந்த விவகாரம் நாடாளுமன்றச் (சிறப்புரிமைகள், விலக்குரிமைகள், அதிகாரங்கள்) சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட கால வரம்பைத் தாண்டிவிட்டதே காரணம் என்று அவர் விளக்கினார்.

“காலக்கெடு வேறாக இருந்திருந்தால் வேறு நடவடிக்கையைப் பரிந்துரைத்திருப்பேன்,” என்றார் அமைச்சர்.

சில்வியா லிம் தற்போது அல்ஜுனிட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். ஃபைசால் மனாப் 2025 பொதுத்தேர்தலில் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததால் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை.

2021ல் நாடாளுமன்றக் குழுவின் கண்டுபிடிப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை இருந்தபோதிலும், இருவருக்கும் தற்காலிகமாகச் சந்தேகத்தின் பலனை அளிக்க அவை முடிவுசெய்தது.

பிரித்தம் சிங் மீதான மேல்முறையீட்டு விசாரணை முடியும்வரை நாடாளுமன்றம் அவர்கள் மீதான நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பரில் பிரித்தம் சிங்கின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது. சில்வியா லிம், ஃபைசல் மனாப் இருவரது பொய்களும் நீதிமன்றத் தீர்ப்பால் உறுதியாகின.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

எனினும், இச்சம்பவம் 14வது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் நடந்ததால், தற்போது செயல்பாட்டில் உள்ள 15வது நாடாளுமன்றத்தால் சட்டப்படி அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது.

நாடாளுமன்றம் விரும்பினால் அவர்களின் நடத்தைக்கு வருத்தம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றலாம். கடந்த ஜனவரி மாத தீர்மானத்திலேயே நாடாளுமன்றத்தில் பொய் கூறுவதற்கெதிரான தனது கடுமையான கண்டனத்தை அவை ஏற்கெனவே தெளிவாகப் பதிவுசெய்துவிட்டது என்று குமாரி இந்திராணி ராஜா குறிப்பிட்டார்.

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் 2021ல் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடங்கியது.

பிரித்தம் சிங், சில்வியா லிம், ஃபைசால் மனாப் ஆகியோர் தம்மை அந்தப் பொய்யைத் தொடருமாறு கூறியதாக ரயீசா கான் சாட்சியமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரித்தம் சிங்கிற்கு $14,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டிலும் அத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சில்வியா லிம்இந்திராணி ராஜாபிரித்தம் சிங்பொய் வழக்குநாடாளுமன்றம்