மேல் நடவடிக்கை தேவையில்லை: காவல்துறை

எஸ்பிஎச் மீடியா நாளிதழ் விற்பனை உயர்த்திக் காட்டப்பட்ட வழக்கு

மேல் நடவடிக்கை தேவையில்லை: காவல்துறை

2 mins read
64e862e6-e3ab-4489-ba1b-12f79df18434
நாளிதழ் விற்பனை உயர்த்திக் காட்டப்பட்டது தொடர்பில் மூத்த ஊழியர்கள் பலர்மீது எஸ்பிஎச் மீடியா நடவடிக்கை எடுத்தது. - படம்: எஸ்பிஎச் மீடியா

எஸ்பிஎச் மீடியா நாளிதழ் விற்பனை எண்ணிக்கை உயர்த்திக் காட்டப்பட்டது தொடர்பில் மேல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அவ்விவகாரத்தில் குற்றவியல் சார்ந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் முன்னாள், இந்நாள் இயக்குநர்களிடமும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தியதாகக் காவல்துறை புதன்கிழமை (ஏப்ரல் 29) வெளியிட்ட அறிக்கை கூறியது.

பொய்க் கணக்கு, ஏமாற்று உள்ளிட்ட குற்றங்கள் குறித்து ஆராயப்பட்டன.

“குற்றவியல் சார்ந்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதை விசாரணை முடிவுகள் காட்டின. அதனால், அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்துடன் ஆலோசனை மேற்கொண்ட காவல்துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என முடிவுசெய்துள்ளது,” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாளிதழ் விற்பனை உயர்த்திக் காட்டப்பட்டது குறித்து எஸ்பிஎச் மீடியாவின் தணிக்கை, இடர் மதிப்பீட்டுக் குழு மறுஆய்வு செய்தது. அக்குழு அளித்த பரிந்துரையின்பேரில், 2023 ஜூன் 21ஆம் தேதி அவ்விவகாரம் தொடர்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

2020 செப்டம்பருக்கும் 2022 மார்ச்சுக்கும் இடையே, ஆலன் அண்ட் கிளெட்ஹில் சட்ட நிறுவனத்தின் துணையுடன் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை நடவடிக்கையில், அன்றாட நாளிதழ் விற்பனை எண்ணிக்கை 82,600 கூட்டிக் காட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு 2021 ஆகஸ்ட் மாதத் தரவுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த உயர்வானது அன்றாட நாளிதழ் விற்பனைச் சராசரியில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு எனக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மூத்த ஊழியர்கள் பலர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் நால்வர் 2023 ஜனவரியில் நிறுவனத்தைவிட்டு வெளியேறினர்.

அமைச்சு விளக்கம்

இந்நிலையில், நாளிதழ் விற்பனை உயர்த்திக் காட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் தானும் மேல் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளிதழ் விற்பனையைக் கணக்கிட 2023 நவம்பரிலிருந்து எஸ்பிஎச் மீடியா புதிய முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது என்றும் அப்புதிய முறை அனைத்துலகச் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தால் சான்றளிக்கப்பட்டது என்றும் அமைச்சு கூறியுள்ளது.

இதனிடையே, “நிறுவன உள்விசாரணையில் கண்டறிந்தவற்றையும் குறைபாடுகளும் சரிசெய்யப்பட்ட பிறகு, 2023ஆம் ஆண்டு இறுதியிலேயே இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது,” என்று எஸ்பிஎச் மீடியா ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்