ஜெர்மன் காப்புறுதி நிறுவனமான அலியான்ஸ், சிங்கப்பூர்க் காப்புறுதி நிறுவனமான இன்கம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்குவது தொடர்பான உடன்பாட்டைச் சாத்தியமாக்குவது தொடர்பில் தொடர்ந்து முயல்வதாகக் கூறியுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்வது குறித்து கடந்த மாதம் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் இன்னும் சில கலந்துரையாடல்கள் தொடர்வதாகவும் அது கூறியது.
நவம்பர் 14ஆம் தேதி சிங்கப்பூர்ப் பங்குச்சந்தையில் வெளியிட்ட அறிக்கையில் அது அவ்வாறு கூறியது.
“பரிமாற்றம் ஏதும் நடைபெறும் என்பதற்கு உத்தரவாதமில்லை,” என்று குறிப்பிட்ட அலியான்ஸ், பொருத்தமான நேரத்தில் இதன் தொடர்பில் கூடுதல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று சொன்னது.
அடுத்த ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை புதிய பரிந்துரையை முன்வைக்க அலியான்சுக்கு கால அவகாசம் உண்டு.
இன்கம் நிறுவனமும் இதன் தொடர்பில் சிங்கப்பூர்ப் பங்குச்சந்தையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிலும் இதேபோன்ற அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இரு காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான உத்தேச ஒப்பந்தத் திட்டத்தை சிங்கப்பூர் அரசாங்கம் நிறுத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு அவற்றின் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
அந்த உத்தேசத் திட்டம் பொதுநலனுக்கு உகந்ததன்று என்பதால் அது நிறுத்தப்பட்டதாக, அக்டோபர் 14ஆம் தேதியன்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஜூலை 17ஆம் தேதி இன்கம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 51 விழுக்காட்டுப் பங்குகளை வாங்க முன்வந்தது அலியான்ஸ். அவற்றின் மொத்த மதிப்பு $2.2 பில்லியன் என்று கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இன்கம் நிறுவனம் லாப நோக்கில் செயல்படும் என்ற கவலை எழுந்தது.
அலியான்ஸ் பரிந்துரையின்கீழ், இன்கம் நிறுவனத்தின் மூலதனத்தைக் குறைக்கும் நோக்கில் மூன்று ஆண்டுகளுக்குள் பங்குதாரர்களிடம் $1.85 பில்லியனைத் திருப்பித் தரவும் திட்டமிடப்பட்டிருந்தது.