சிங்கப்பூரில் மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் பரவிய சம்பவம் ஏதும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் இங்கு குறைவு என்றாலும் அத்தகைய கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று அது வலியுறுத்தியது.
வெளிநாடுகளில் மனிதர்களிடையே பறவைக் காய்ச்சல் பரவியதாகப் பதிவான சம்பவங்களில் கிட்டத்தட்ட அனைத்துச் சம்பவங்களிலும் நோய்வாய்ப்பட்ட பறவைகளுடனோ கிருமிப்பரவலால் மாசடைந்த சூழலுடனோ நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க, இத்தகைய சூழலைத் தவிர்ப்பதே சிறந்த வழி என்று அமைச்சு கூறியது.
பறவைக் காய்ச்சல் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பறவைகளுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்கும்படி பொதுமக்களை அது வலியுறுத்தியது.
அண்மையில் அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் கிருமி தொற்றிய பசுக்களுடன் தொடர்பில் இருந்த மனிதர்களுக்கும் அது தொற்றியுள்ளது.
தென்கிழக்காசியாவில் அவ்வப்போது பதிவாகும் பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் மிரட்டலாக விளங்குவதையும் பறவைகள் இதனால் மரணம் ஏற்படும் விகிதம் அதிகம் என்பதையும் வல்லுநர்கள் சுட்டுகின்றனர்.
‘எச்5என்1’ பறவைக் காய்ச்சல் கிருமி பரவுவது குறித்துக் கடந்த ஏப்ரல் மாதம் உலகச் சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்தது. மனிதர்களிடையே இந்தக் காய்ச்சல் மிக அதிக எண்ணிக்கையில் மரணம் விளைவிக்கும் என்று நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜெரமி ஃபாரர் எச்சரித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
2003 முதல் இப்போது வரை இத்தகைய 889 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 463 பேர் (52%) மாண்டுவிட்டனர். 23 நாடுகளைச் சேர்ந்தோர் இவ்வாறு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
புலம் பெயரும் பறவைகள் அல்லது சிங்கப்பூர் வழியாகச் செல்லும் பயணிகள் மூலம் இந்நோய் சிங்கப்பூரில் பரவும் சாத்தியம் இருப்பதால் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம் என்று வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

