தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவுச்சாலை சுரங்கத்தில் கார் தீப்பற்றியது

1 mins read
09d5735a-e8eb-4acd-a9d9-cd9ae4618a11
பார்ட்லி சாலை ஈஸ்ட் வெளிச்சாலைக்குப் பிறகு, தெம்பனிஸ் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதையில் தீ விபத்து ஏற்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காலாங்-பாய லேபார் விரைவுச்சாலை சுரங்கப்பாதையில் சனிக்கிழமை (நவம்பர் 2) கார் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது. அதையடுத்து, தீயை அணைக்க சுரங்கத்தின் நீர் தெளிப்பான்கள் தானாகவே செயல்பட்டன.

பார்ட்லி சாலை ஈஸ்ட் வெளிச்சாலைக்குப் பிறகு, தெம்பனிஸ் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து இரவு 9 மணியளவில் தனக்கு தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காரின் இயந்திரப் பகுதியில் மூண்ட தீயை, தீயணைப்பாளர்கள் வருவதற்கு முன்பே சுரங்கத்தின் நீர் தெளிப்பான்கள் அணைத்துவிட்டன.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்வதாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் OneMotoring இணையப்பக்கத்தின்படி, 9 கிலோமீட்டர் நீளமுடைய காலாங்-பாய லேபார் விரைவுச்சாலை சுரங்கத்தின் கூரையில் நீர் தெளிப்பான்களும் புகையை அகற்ற காற்றோட்ட வசதியும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்