சிங்கப்பூர் ஃபார்முலா ஒன் பந்தயம் தொடர்பான உடன்பாட்டில் எவ்வித முறைகேடும் இடம்பெற்றதாகத் தன்னிச்சையான மறுஆய்வுக் குழு கண்டறியவில்லை என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் புதன்கிழமை (அக்டோபர் 15) தெரிவித்தார்.
சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் கடந்த 2024ஆம் ஆண்டு அந்த மறுஆய்வுக் குழுவை அமைத்தது.
எஃப்1 திட்டம் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் விடாமுயற்சியுடனும், கடுமையாகவும், கவனமாகவும் நடந்துகொண்டதாக அக்குழு மதிப்பிட்டுள்ளது என்று நாடாளுமன்றத்திற்கு அளித்த எழுத்துவழி பதிலில் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022 முதல் வரும் 2028 வரையிலான ஏழாண்டுகளுக்குச் சிங்கப்பூர் கிராண்ட் பிரீயை நடத்த சிங்கப்பூர் ஜிபி அமைப்பிற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விதிமுறைகளை மறுஆய்வு செய்வதற்காகத் தன்னிச்சையான குழுவை அமைக்கும்படி பயணத்துறைக் கழகத்திற்குச் சென்ற ஆண்டு திரு கான் அமைச்சர்நிலை உத்தரவைப் பிறப்பித்தார்.
“அரசாங்கத்தின் நலன்கள் போதிய அளவில் பாதுகாக்கப்பட்டதாகவும், தற்போதைய ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகள் அரசாங்கத்திற்கும் ‘சிங்கப்பூர் ஜிபி’க்கும் இடையிலான வணிகக் கடமைகள், நன்மைகள் தொடர்பில் நியாயமான, நேரிய பரிவர்த்தனையை அமைத்ததாகவும் மறுஆய்வுக் குழு தெரிவித்துள்ளது,” என்று அவர் விளக்கினார்.
அத்துடன், எஃப்1 பந்தயத்தை நடத்துவதற்கான செலவுகளைவிட சிங்கப்பூருக்குக் கிட்டிய பலன்கள் அதிகம் என்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகையும் அவர்கள்மூலம் ஈட்டப்பட்ட வருமானமும் இலக்குகளைத் தாண்டிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.