திரு லீ சியன் யாங், அவரின் மனைவி லீ சுவெட் ஃபெர்ன் இருவரும் சிங்கப்பூருக்குத் திரும்பி வருவதைத் தடுக்கும் சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
“அவர்கள் எந்நேரமும் சிங்கப்பூர் திரும்பலாம். இதுவரையிலும் கட்டுப்பாடு ஏதும் இல்லை,” என்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு காவல்துறை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) அறிக்கை மூலம் பதிலளித்தது.
விசாரணையில் ஒத்துழைக்க 2022 ஜூன் மாதம் காவல்துறை, சிங்கப்பூரின் முதல் பிரதமரான மறைந்த திரு லீ குவான் யூவின் இளைய மகனான திரு லீ சியன் யாங், அவரது மனைவி ஆகியோரிடம் கூறியது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அவர்கள் முதலில் ஒப்புக்கொண்டனர். ஆனால், விசாரணை தொடர்பான நேர்காணலுக்கு வரவில்லை. அவர்கள் 2022 ஜூன் 15ஆம் தேதி சிங்கப்பூரைவிட்டு வெளியேறினர், இன்னும் திரும்பி வரவில்லை,” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தனது மூத்த சகோதரியான டாக்டர் லீ வெய் லிங் கடந்த புதன்கிழமை (அக்டோபர் 9) காலமானதைத் தொடர்ந்து திரு லீ சிங்கப்பூர் திரும்புவது குறித்து மீண்டும் பேச்சு இடம்பெறுகிறது.
டாக்டர் லீ வெய் லிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்கத் தான் சிங்கப்பூர் வரப்போவதில்லை என்று திரு லீ முன்னதாகக் கூறியிருந்தார். தம் மகன் லீ ஹுவான்வு இறுதிச் சடங்கில் உதவுவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
டாக்டர் லீ, அரிய வகை முளைச்சிதைவு நோய்க்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து காலமானார். அவருக்கு வயது 69.

